Sunday, January 7, 2024

4th King

ஹென்றி வான் டிகே (Henry Van Dyke) என்ற எழுத்தாளர் எழுதியிருக்கக்கூடிய ஒரு கற்பனைக் கதைதான் நான்காவது ஞானி என்பதாகும்.

விண்ணில் ஒரு மிகப்பெரிய அடையாளம் தோன்றியதைப் பார்த்த கீழ்த்திசை ஞானிகளான கஸ்பார், மெல்கியோர், பல்தசார் போன்றோர் அரசர் ஒருவர் பிறந்திருக்கின்றார் என்று உறுதி செய்துகொண்டு, புதிதாகப் பிறந்திருக்கின்ற அரசரைக் காண யூதேயாவை நோக்கிப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களோடு அர்த்தபான் என்ற நான்காவது ஞானியும் புறப்படுவதாய் இருந்தது. அவர் அவர்களோடு சேர்ந்து போகவதற்காக எல்லா ஏற்பாடுகளையும் செய்துகொண்டு, பிறந்திருக்கும் குழந்தைக்குப் பரிசளிக்க முத்துகளையும் எடுத்துக்கொண்டு கிளம்பியபோது வழியில் பெண் ஒருவர் குற்றுயிராய்க் கிடந்தார். எனவே, அர்த்தபான் அவருக்கு பணிவிடை புரிந்து, அவரைக் குணப்படுத்திவிட்டு, தன்னிடம் இருந்த முத்துகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்துவிட்டுக் கிளம்பினார்.


இதற்கிடையில் அர்த்தபான் வருவார் என்று நீண்ட நேரமாகக் காத்திருந்த மற்ற மூன்று ஞானிகளும், அவர் வரக் காலம் தாழ்த்தியதால், அவரை விட்டுவிட்டுக் கிளம்பிப் போய்விட்டார்கள். அவர்கள் போனபின்பு அர்த்தபான் விண்மீனின் வழிகாட்டுதலில் கொஞ்சம் தாமதமாகவே யூதேயாவிற்குச் சென்றார்.


இந்த நேரத்தில் ஏரோது மன்னன், பெத்லகேமையும் அதனைச் சுற்றிலும் உள்ள ஊர்களிலும் இருந்த இரண்டு வயதுக்கும் அதற்கு உட்பட்ட குழந்தைகளையும் கொல்வதற்கு ஆணை பிறப்பித்திருந்தான். அவனுடைய ஆணைக்கிணங்க படைவீரர்கள் இரண்டு வயதுக்கும் உட்பட்ட குழந்தைகளை கொலை செய்கின்ற வேலையில் இருந்தபோது அர்த்தபான் ஒரு வீட்டின் அருகே இருந்தார். அந்த வீட்டின் உள்ளே இரண்டு வயதுக்கும் குறைவான வயதில் குழந்தை ஒன்று இருந்தது. படைவீரன் ஒருவன் அந்த வீட்டில் இருந்த குழந்தையைக் கொல்வதற்கு முயன்றபோது அர்த்தபான் படைவீரனுக்கு தன்னிடத்தில் இருந்த முத்துகளில் ஒன்றை கொடுத்து, இந்த முட்டை வாங்கிக் கொண்டு அந்த குழந்தையை விட்டு விடு என்று அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார். இவ்வாறு அவர் ஒவ்வொரு முறையும் மேசியாவைக் காண முயன்றபோது எதாவது ஒரு தடங்கல் ஏற்பட்டு அவரைக் காணமுடியாமலே போய்க்கொண்டிருந்தது.


மேசியாவை எப்படியாவது பார்த்து, அவருக்கு தன்னிடம் இருக்கும் முத்தைப் பரிசாகக் கொடுத்துவிட வேண்டும் என்று அர்த்தபான் பல ஆண்டுகளாக எருசலேம் வீதிகளில் எப்படியும் பார்த்து விட வேண்டும் என்ற உணர்வோடு அலைந்துகொண்டிருந்தார். இப்படி அவர் அலைந்துகொண்டிருந்தபொது தேவைப்படுவோருக்கு எல்லாம் தன்னிடம் இருந்த முத்தைக் கொடுத்து அவர் உதவிசெய்து வந்தார். இதனால் அவரிடமிருந்த முத்துக்கள் குறைந்துகொண்டே போயின.


ஒருநாள் அவர் எருசலேம் வீதிகளில் அலைந்துகொண்டிருந்தபோது மேசியா போகிறார் என்று கேள்விப்பட்டு, அர்த்தபான் அவரைப் பார்க்க விரைந்து சென்றார். அங்கோ மேசியா எனப்படும் இயேசு ஒரு குற்றவாளியைப் போன்று சிலுவையை சுமந்துகொண்டு போய்க்கொண்டிருந்தார். அவருக்குப் பரிசு கொடுக்க தன்னுடைய ஆடைக்குள் கைவிட்டுப் பார்த்தபோது, அவரிடமிருந்த முத்துக்கள் ஏற்கனவே தீர்ந்துபோயிருந்தது தெரிய வந்தது. மேசியாவிற்கு தன்னால் பரிசு ஒன்றும் கொடுக்க முடியவில்லையே என்று அவர் கதறி அழுதார். அப்போது மேசியா என்னும் இயேசு அவரிடம், "மிகச் சிறியோராகிய இவர்களுக்குச் செய்ததெல்லாம் எனக்கே செய்தாய்" என்று சொல்லிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து சென்றார்.


மேசியாவைக் காணவேண்டும், அவருக்குத் தன்னிடம் இருக்கின்ற பரிசினைத் தரவேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு செயல்பட்ட அர்த்தபான் என்ற அந்த நான்காவது ஞானி, நாமும் நம்மிடம் இருப்பவற்றை ஆண்டவர் இயேசுவுக்குத் தரவேண்டும் என்ற சிந்தனையை நம்முடைய உள்ளத்தில் விதைக்கின்றார். நாம் இயேசுவுக்கு என்ன பரிசினைத் தரப்போகின்றோம் என்று சிந்திப்போம்.

Current Post

தீயோனிடமிருந்து என்னை விடுவியும்

தனக்குச் சிறிது காலமே எஞ்சியிருக்கிறது என்பதை அலகை அறிந்துள்ளது. அதனால் கடுஞ் சீற்றத்துடன் உங்களிடம் வந்துள்ளது. திருவெளிப்பாடு 12:12  பிசாச...