ஒருமுறை ஒரு மனிதன் கடவுளை நோக்கி கடும் தவம் இருந்து வந்தான். ஒருநாள் கடவுள் அவனுக்கு காட்சி அளித்து வழக்கம்போல என்ன வரம் வேண்டுமென அவர் கேட்க, பரிசுச்சீட்டில் 1 கோடி ரூபாய் வரவேண்டுமென்று தன் வரத்தை அவன் கடவுளிடம் முன்வைத்தான். அப்படியே ஆகட்டும் என்று கடவுள் அவன் கேட்ட வரத்தை அளித்துவிட்டு மறைந்து விட்டார். இவனுக்கு மகா மகிழ்ச்சி. ஊரெங்கும் சென்று 1 கோடி கிடைத்து விட்டது என்று தம்பட்டம் அடித்துக் கொண்டு திரிந்தான். ஏகப்பட்ட சொத்துக்களை தவணை முறையில் வாங்கி குவித்து ஏகபோகமாக இருந்தான். வரம் கொடுத்தவர் கடவுளாயிற்றே, நம்பாமல் இருக்க முடியுமா என்ன? சில நாட்கள் சென்றன. பரிசுச்சீட்டு முடிவுகளும் வெளிவந்தன.
ஆனால் இவன் பெயர் அதில் இல்லவேயில்லை. நாளிதழை நாலாபுறங்களிலும் திருப்பித்திருப்பி பார்த்தான், நிச்சயமாக இல்லவேயில்லை. அவன் இதயம் சுக்குநூறாய் உடைந்து போனது. அனைத்து சொத்துக்களும் இவனிடமிருந்து பறிக்கப்பட்டுவிட்டன. கடன் தொல்லை வேறு மிக அதிகமாகிவிட்டது. ஊருக்குள் தலைகாட்ட முடியாமல், அவமானம் தாங்காது தற்கொலை அவன் செய்துகொண்டான்.
இறந்துபோன அவனின் ஆன்மா மேலோகம் சென்றது. அங்கே கடவுள் இருக்கும் இடத்தை தேடி சென்று அவரைக்கண்டு கேள்விகளை வீசினான். "நான் என்னயா தப்பு பண்ணேன்? நீ வரம் கொடுத்தத நம்பினேன், அது தப்பா? உனக்கு சொல் சுத்தம் இல்லையா?", என்று ஏகவசனங்கள் பேசினான். கடவுள் அவர் இருக்கையில் இருந்து இறங்கிவந்து, இவன் கன்னத்தில் 'பொளேர்' என்று ஒரு அறை விட்டார். “நான் வரம் அளித்தது உண்மை தான். நீ ஊருக்குள்ள சென்று தம்பட்டம் அடித்தாய், சொத்துக்களை வாங்கி குவித்தாய், ஆனால் கடைக்கு சென்று பரிசுச்சீட்டு வாங்கினாயா மடையா? நீ பரிசுச்சீட்டை வாங்கினால் தானே, என்னால் உன் பெயரை குலுக்கலில் இருந்து தேர்ந்தெடுக்க முடியும்", என்று பதிலளித்தார் கடவுள்.
கடவுள் பார்த்துக் கொள்வார் என்ற நம்பிக்கையில் வாழ்வது சரிதான். ஆனால் அந்த நம்பிக்கை செயலாக்கம் பெறவேண்டும். செயலாக்கம் இல்லாத நம்பிக்கை செத்ததுக்கு சமமாகும். இதைத்தான் மத்தேயு 7 : 21 ல் “என்னை நோக்கி, 'ஆண்டவரே, ஆண்டவரே' எனச் சொல்பவரெல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக, விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வர்” என்றார்.