Tuesday, July 21, 2020

Thief in circus !!!

ஒரு திருடன் சர்கஸ் பார்க்கப் போனான்.
 வட்டமான நெருப்பு வளையத்துக்குள் சர்கஸ் வீரன் ஒருவன் பாய்கின்ற காட்சி.
நிகழ்ச்சி முடிந்ததும் திருடன் அந்த சர்கஸ் வீரனிடம் சென்று இந்த பணிக்கு உனக்கு எவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என கேட்டான். அதற்கு அந்த வீரன்
‘ஆயிரம் ரூபாய் தருகிறார்கள்’
என்றபோது ‘என்னுடன் வா, உனக்கு ஐயாயிரம் தருகிறேன்’
எனக் கூறி அழைத்துச் சென்றான்.
அடுத்தநாள் அந்தத் திருடன் ஒரு வீட்டில் திருடச் செல்லும்போது சர்கஸ் வீரனையும் அழைத்துச் சென்றான்.
அந்த வீட்டின் சுவரின் மேல்பக்கம் ஒரு துளை இருந்தது. அதை ஒரு ஆள் நுழையும் அளவுக்கு பெரிதுபடுத்திக்கொடுத்த பிறகு சர்கஸ் வீரனிடம்,
‘இந்தத் துளை வழியாக வீட்டுக்குள் நுழைந்து நகைகளை திருடி எடுத்து வா’
 என்று சொன்னான். அதற்கு சர்கஸ் வீரன் கொஞ்சமும் தாமதிக்காமல்,
 ‘அப்படிச் செய்ய வேண்டுமானால் பத்தாயிரம் பேரைக் கொண்டு வா’
என சொல்ல திருடனுக்கு பேரதிர்ச்சி. ‘ஏன்’ என கேட்கிறான்.
சர்கஸ் வீரன், ‘நான் சர்கஸில் நெருப்பு வளையத்துக்குள் நானாக நுழைந்து செல்வதில்லை.
சர்கஸ் பார்க்க வருகிற பத்தாயிரம் மக்கள் கை தட்டுவதினாலும் விசில் அடித்து உற்சாகப்படுத்துவதினாலும் எனக்குள் பொங்குகின்ற உற்சாகத்தினால்தான் நெருப்பு வளையத்துக்குள் அத்தனை லாவகமாக நுழைகிறேன்.
நெருப்பு வளையத்துக்குள் நுழைவதைப்போல இந்த சுவரின் பெரிய ஓட்டைக்குள் நுழைந்து உள்ளே சென்று வர வேண்டுமானால் எனக்கு பத்தாயிரம் பேர் கை தட்ட வேண்டும்’ என்று சொல்ல திருடன் தலைசுற்றி மயக்கமடைந்தான்.
இந்தக் கதையை *புலவர் கீரன்* அவர்கள் ஒரு சொற்பொழிவில் சொல்லியுள்ளார்.

நம்மைச் சுற்றி இருப்பவர்கள் நம்மிடம் காட்டுகின்ற அன்பிலும், ஆதரவிலும், ஊக்கத்திலும் உண்டாகும் உற்சாகமே நம் ஆற்றலை அதிகரிக்கச் செய்கிறது.
 உற்சாகமாக இருக்கும்போதுதான் மனமும் சுறுசுறுப்புடன் செயல்படும்.
துறுதுறுவென எதையாவது செய்ய வைத்து நம்மை உயிர்ப்புடன் இயங்க வைக்கும்.
உற்சாகம் குறையும்போது நம்மீது ஒட்டிக்கொண்டிருக்கும் சிறு தூசியைக்கூட நம்மால் தன்னிச்சையாக தட்டிவிட்டுக்கொள்ள முடியாது.
நம்முடைய வெற்றிக்கும் மகிழ்ச்சிக்கும் நாம் மட்டுமே காரணமில்லை.
நாம் மகிழ்ச்சியாக இருக்க நம்மை சுற்றி உள்ளவர்களை பெருமகிழ்ச்சியோடு வைத்திருப்போம்.
*மகிழ்வித்து மகிழ்வோம், மகிழ்ந்து மகிழ்விப்போம் வாங்க!*

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...