Sunday, June 12, 2022

Holy Trinity Sunday

*தூய திரித்துவ ஞாயிறு - Holy Trinity Sunday* *-12.06.2022* 

~~~~~~~~~~~~~~~~~

எழுதியவர்: பாஸ்டர் S . ஜான் மதியழகன்.

கொரட்டூர் RS., சென்னை -600076.

~~~~~~~~~~~~~~~~~~ பெந்தேகொஸ்தே பண்டிகைக்கு பின்வரும் ஞாயிற்றுக் கிழமை திருச்சபை நாட்காட்டியில் ( Church Calendar)தூய திரித்துவ ஞாயிறு (Holy Trinity Sunday ) என்று அழைக்கப்படுகிறது.

எனவே 2022 ஜூன் 12 ஆம் தேதி "தூய  திரித்துவ ஞாயிறு" என்று அழைக்கப்படுகிறது. திரித்துவ ஞாயிற்றுக்கிழையுடன் கிறிஸ்தவ திருச்சபையின் பண்டிகைக் காலம் நிறைவடைகிறது. லுத்தரன் திருச்சபைகள்  திரித்துவப் பண்டிகைக்கு பின்வரும் ஞாயிற்றுக் கிழமைகளை  திரித்துவப் பண்டிகைக்கு பின்வரும் முதலாம் ஞாயிறு , இரண்டாம் ஞாயிறு என்று தொடர்ச்சியாக அழைக்கிறது. மாறாக,தென் இந்திய திருச்சபைகள் பெந்தேகொஸ்தே திருநாளுக்குப் பின்வரும் முதல் ஞாயிறு , இரண்டாம் ஞாயிறு என்று பண்டிகையல்லாத காலத்தில் வரும் ஞாயிறுகளை பெந்தேகொஸ்தே பண்டிகையின் அடிப்படையில் கணக்கிடுகிறது. 


I . திரித்துவ உபதேசம் :

 ஒரு கடவுளை வழிபடும் மதங்களாக யூத மதம் , கிறிஸ்தவ மதம் மற்றும் இஸ்லாமிய மதம் இருக்கிறது. யூதர்கள் கடவுளை கர்த்தர் (யெகோவா) என்றும் முஸ்லீம்கள்/ இஸ்லாமியர்கள் தங்கள் கடவுளை அல்லா என்றும் அழைக்கின்றனர். கிறிஸ்தவர்கள் தங்கள்  கடவுளை திரியேகக்கடவுள் என்றும் அழைக்கின்றனர். கடவுள் ஒருவராக இருந்தாலும் அவர் பிதா , குமாரன்,  பரிசுத்த ஆவியாகிய திரியேகக் கடவுளாக இருக்கிறார் (One God in Three Persons ) என்பது கிறிஸ்தவர்களின் நம்பிக்கை ஆகும். 


வேத புத்தகத்தின் முதல் புத்தகம் ஆதியாகமம் ( தொடக்கநூல்) முதல் கடைசிபுத்தகமாகிய வெளிப்படுத்தல்

 (திருவெளிப்பாடு) வரை வாசிக்கும் போது கடவுள் படிப்படியாக அல்லது கொஞ்சம் கொஞ்சமாக  தன்னை மனிதர்களுக்கு வெளிப்படுத்துவதை நாம் காண்கிறோம்.  இதை தேவன் தன்னுடைய பேச்சின் மூலமாக ( Self -Talk ) அல்லது  படிப்படியாக  அல்லது கொஞ்சம் கொஞ்சமாக தன்னை மனிதர்களுக்கு வெளிப்படுத்தியதன்  (Progressive Revelation ) மூலமாக தான்  பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரித்துவக் கடவுளாக இருக்கிறார் என்பதை வெளிப்படுத்துகிறார் என்பதை அறிகிறோம். கடவுள் தன்னை திரித்துவக் கடவுளாக வேத புத்தகத்தில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பதை கிறிஸ்தவர்கள் நம்புகின்றனர். 


II. திரித்துவக் கடவுளை /புரிந்து கொள்ளுதல் : 

1. தூய பேட்றிக் ( St.Patrick ) அயர்லாந்து தேசத்திற்கு நற்செய்தியை அறிவிக்க சென்ற போது கிறிஸ்தவ கடவுள் திரித்துவக் கடவுளாக இருக்கிறார் என்பதை  அயர்லாந்து மக்களுக்கு எளிதாக விளக்க,  அந்நாட்டில் காணப்பட்ட ஒரே காம்பில் மூன்று சிற்றிலைகளைக்கொண்ட ஷாம்ராக் ( three - leafed Shamrock ) இலையை பயன்படுத்தி  விளக்கினார். பிற்காலத்தில்  அயர்லாந்து நாட்டின் அடையாளமாக (National Emblem of Ireland ) இந்த மூன்று சிற்றிலைகளைக் கொண்ட  ஷாம்ராக் இலை அடையாளச் சின்னமானது. 


2. திரித்துவக்கடவுளை விளக்க ரஷிய ஓவியர்  ஆண்ட்ரே ரப்ளே / Andrei Rublei ( 1370- 1437)  வரைந்த (Holy Trinity Icon )படம் மிகவும் முக்கியமானது ஆகும். ஆண்ட்ரே ரப்ளே ஒரு துறவியாவார். இவர் பிதா குமாரன் பரிசுத்த ஆவியை ஒரே தோற்றத்தில் இருக்கக்கூடிய மூன்று நபர்களாகவும் , இம்மூவரும் -ஒருவர்  மற்றவரை சார்ந்து இருப்பது போலும்,  ஒவ்வொருவர் தலையிலும் பொன்னொளி வட்டங்கள் (Halos)  இருப்பது போன்றும் , மூவருக்கும் பொன்னாலான இறக்கைகள் ( Golden Wings ) இருப்பது போன்றும்  வரைந்துள்ளார் (One Substance , Three Persons). 


3. கிறிஸ்தவ திருச்சபையின் வரலாற்றில்  கடவுள் திரித்துவக் கடவுளாக  இருக்கின்றார் என்பதை விளக்க கிரேக்க மொழியில் "ட்ரையஸ்-trias என்ற வார்த்தையை முதன் முதலில் உபயோகித்தவர்  அந்தியோகியாவில் வாழ்ந்த தியாபிலஸ் (Theophilus of Antioch ) ஆவார். தெர்துல்லியான் ( Tertullian)  கடவுள் திரித்துவக் கடவுளாக இருக்கிறார் என்பதை விளக்க இலத்தின் மொழியில் " ட்ரினிடாஸ்" , trinitas என்ற வார்த்தையை பயன்படுத்தினார். அப்பொழுது

 "ஒரே கடவுள் மூன்று நபர்களாக இருக்கிறார்" (  “one substance, three persons.” ) என்ற சொற்றொடரை அவர் கிறிஸ்தவ இறையியலில் முதன் முதலில் பயன்படுத்தினார்(Ref:Trinity / Encyclopedia of Christianity).


4. பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரியேகக்கடவுள் மூவராயினும் ஒரே கடவுளாக இருக்கின்றனர். Three Persons in One Godhead .பிதா,  குமாரன் பரிசுத்த ஆவியாகிய மூவரும் சமமானவர்கள் (Co -equal) , சம வல்லமையுடையவர்கள் (Co-power),  எப்போதும் எல்லாக்காலங்களிலும் சம காலத்தில் இருப்பவர்கள் (Co-existence). 


5. பிதா குமாரன் பரிசுத்த ஆவியில் அவர்களுக்கு இடையேயுள்ள உறவு சம்பந்தமான கேள்விகள் : 

பிதா, யாருடைய பிதா? கிறிஸ்துவின் பிதா. குமாரன், யாருடைய குமாரன்? பிதாவின் குமாரன். பரிசுத்த ஆவி-  யாருடைய ஆவி கிறிஸ்துவின் ஆவி . 


6. பிதா குமாரன் அல்ல ; குமாரன் பிதா அல்ல ; பிதா பரிசுத்த ஆவி அல்ல ; பரிசுத்த ஆவி பிதா அல்ல . பிதா தேவன். குமாரன் தேவன் . பரிசுத்த ஆவி தேவன். மூன்று கடவுள்கள் அல்ல ; ஆனால் ஒரே கடவுள். 


7. திரித்துவத் துதி : 

பிதாவுக்கும் குமாரனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் மகிமை உண்டாவதாக ! 

ஆதியிலும் இப்பொழுதும்  எப்போதுமான சதாகாலங்களிலும் மகிமையுண்டாவதாக ! ஆமென். 


III. பிதா குமாரன் பரிசுத்த ஆவியாகிய திரித்துவக்கடவுள்/மூவொரு கடவுள் வேத புத்தகத்தில் ஒன்றாக வரும் இடங்கள் : 

~~~~~~~~~~~~~~~~~

1. இயேசு  ஞானஸ்நானம் பெறும் போது திரித்துவக் கடவுள் வெளிப்படுதல் : 

இயேசு ஞானஸ்நானம் பெற்று, ஜலத்திலிருந்து கரையேறினவுடனே, இதோ, வானம் அவருக்குத் திறக்கப்பட்டது, தேவ ஆவி புறாவைப்போல இறங்கி, தம்மேல் வருகிறதைக் கண்டார். 

 அன்றியும், வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி: இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது. மத்தேயு 3:16 - 17.


2. இயேசுவின் ஞானஸ்நானக் கட்டளையில் திரித்துவக் கடவுளின் பெயர்  காணப்படுதல் : 

"  ஆகையால், நீங்கள் புறப்பட்டுப்போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங்கொடுத்து, 

நான் உங்களுக்குக் கட்டளையிட்டயாவையும் அவர்கள் கைக்கொள்ளும்படி அவர்களுக்கு உபதேசம்பண்ணுங்கள். இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்."

மத்தேயு 28:19- 20.


3. திருச்சபையின் ஆராதனை முடிவில்  திரித்துவக் கடவுளின் பெயரால் ஆசிர்வாதம் கூறப்படுதல் :

" (நமது) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும், உங்கள் அனைவரோடுங்கூட இருப்பதாக. ஆமென்." 2 கொரிந்தியர் 13:14


முடிவுரை : 

வேத புத்தகத்தில் பழைய ஏற்பாட்டிலும் புதிய ஏற்பாட்டிலும் திரித்துவக் கடவுளை பற்றிய உபதேசம் மிகவும் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

" ஆசியாவில் உள்ள ஏழு திருச்சபைகளுக்கும் யோவான் எழுதுவது; இருந்தவரும் இருக்கின்றவரும் வரவிருக்கின்றவருமான கடவுளிடமிருந்தும் ( பிதா), அவரது அரியணைமுன் நிற்கும் ஏழு ஆவிகளிடமிருந்தும்

( பரிசுத்த ஆவி ), இயேசு கிறிஸ்துவிடமிருந்தும்( குமாரன் ) உங்களுக்கு அருளும் அமைதியும் உரித்தாகுக!  திருவெளிப்பாடு 1:4.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...