குருக்கள் ஏன்? திருமணம் செய்ய கூடாது…
அண்மையில் வெளிவந்த ஒரு செய்தியானது தமிழ்நாட்டில் வாழும் கத்தோலிக்க மதத்தினரை தலைகுனிய வைத்தது.
கத்தோலிக்கர் அல்லாத தமிழர்கள் கத்தோலிக்க குருக்கள் குறித்தும் நம் மதத்தின் அருட்சாதனமான ஒப்புரவு (பாவசங்கீர்த்தனம்) குறித்து நக்கலாகவும் பேசுகின்றனர்.
ஏன் கத்தோலிக்கர்கள் பலருமே ஒப்புரவு அருட்சாதனம் குறித்து, ஐயப்பாடு கொண்டிருக்கலாம். அதிலும் குறிப்பாக கத்தோலிக்க குருக்கள் அனைவருமே தவறானவர்கள் என்பது போன்ற பொதுப்புத்தியும் கட்டமைக்கப்பட்டு வருகிறது.
இது குறித்து எனது கருத்தினைப் பகிர்ந்து கொள்ளலாம் என நினைக்கிறேன்.
முதலில் ஒன்றைக் கூற விரும்புகிறேன். தவறிழைக்கும் குருக்கள் எண்ணிக்கையில் குறைவே. தமிழ்நாட்டில் உண்மையான ஆன்மீக உணர்வோடு, இறைப்பணி செய்யும் பல குருக்களும், கன்னியர்களும் உள்ளனர். அவர்களை தமிழ்நாட்டிற்கு எடுத்துரைப்போம்.
அவர்கள் செய்யும் பணிகளை ஊடகங்களில் வரச் செய்வோம். அவர்களால் பலனடைந்த மக்களை (ஏதிலிகள்/நோயாளிகள்/கைவிடப்பட்ட முதியவர்கள்/ஒடுக்கப்பட்டவர்கள்/பழங்குடியினர்) மக்களுக்கு காட்டுவோம்.
நல்ல குருக்களுக்கு விருதுகள், பாராட்டுகள் வழங்குவோம். அவர்களை உற்சாகப்படுத்துவோம். கடந்த 500 ஆண்டுகளாக கத்தோலிக்க குருக்கள் தமிழர்களுக்குச் செய்துள்ள தொண்டினை கட்டுரையாக எழுதுவோம்.
குறிப்பாக இயேசு சபைக் குருக்கள் உயிரைப் பணயம் வைத்து செய்துள்ள பணிகளை விவிரிப்போம். அவர்களால் இந்த உலகமே பயனடைந்துள்ளது என்றால் அது மிகையாகாது. இது நாம் செய்ய வேண்டிய முதல் பணி.
இரண்டாவதாக நான் கூறவிரும்புவது இதுவே.
முதலில் நமது மதம் கத்தோலிக்கம் என்பதை நாம் உணர வேண்டும். நாம் கத்தோலிக்க திருச்சபைக்கு கட்டுப்பட்டவர்கள். நமது கத்தோலிக்கத் திருச்சபையானது, விவிலியம் மற்றும் மரபு என்கிற இரு தூண்களில் நிற்கிறது. இதன் வயது ஈராயிரம் ஆண்டுகள்.
கத்தோலிக்க திருச்சபைக்கு வேறோரு பெயரும் உண்டு. அது "கிறிஸ்துவின் மறையுடல்" என்பதாகும்.
கத்தோலிக்க மதத்தின் கொடை என்னவென்றால், திருப்பலியே. இதனை ஒவ்வொரு கத்தோலிக்கர்களும் உணர வேண்டும்.
பாஸ்கா என்பது இயேசுவின் பாடுகள், இறப்பு, உயிர்ப்பு என்ற மூன்று நிகழ்வுகளையும் மீண்டும் மீண்டும் நினைவுபடுத்துவது. இந்த பாஸ்கா மறைபொருளின் கொண்டாட்டமே திருப்பலிக் கொண்டாட்டம் எனப்படும்.
ஒவ்வொரு திருப்பலியிலும் இயேசு வெறும் அப்பத்தை தனது உடலாகவும், வெறும் இரசத்தை தனது அரத்தமாகவும் மாற்றுகிறார். இது ஒரு அதிசய நிகழ்வு. இது ஒவ்வொரு நாளும் உலகில் உள்ள அனைத்து கத்தோலிக்க கோயில்களிலும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
திருப்பலி என்பது கிறிஸ்துவின் குருத்துவப்பணியின் தொடர்ச்சி. ஆகையால் ஒரு குருவின் தலையாயப் பணி என்பது தினமும் திருப்பலி நிறைவேற்றுவது ஆகும். அவரது இரண்டாவது பணியே மக்கள் தொண்டு ஆகும்.
அனைத்து நாள்களிலோ அல்லது ஞாயிற்றுக்கிழமையாவது திருப்பலியில் பங்கேற்பது ஒவ்வொரு கத்தோலிக்கரின் கடமை.
இது கிறித்துவின் இரண்டாம் வருகை வரையிலும் நடைபெற வேண்டும்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு திருப்பலியை தனது வாழ்நாள் முழுமையும் ஒப்புக்கொடுக்க ஒருவர் முன்வருகிறார் என்றால் அவர் இல்லற வாழ்வில் தன்னை இணைத்துக் கொள்ள இயலாது. ஒரு உறையில் இரு வாள்கள் வைக்க முடியாது.
அதிலும் ஒரு குருவானவர், தனது பங்கிலுள்ள மக்களையும் வழிநடத்திச் செல்லும் பொறுப்பினை ஏற்கிறார்.
அத்தகைய குரு திருமணம் செய்து குடும்பத்தைக் கொண்டிருந்தால், அவர் குடும்பத்தைப் பார்ப்பாரா? திருச்சபையைப் பார்ப்பாரா?
கண்டிப்பாக குடும்ப நலனே ஒங்கும். தனது குடும்பத்திற்கு பணம் சம்பாதிக்க, திருச்சபையில் பிரிவினைகளை ஏற்படுத்துவர்.
புதிய புதிய இறையியல் கோட்பாடுகளை உருவாக்குவர். ஈராயிரம் ஆண்டுகளாக நிலைத்து நிற்கும் கத்தோலிக்க மதம், சுக்கு நூறாக உடையும்.
இது ஏதோ எனது கற்பனை என்று கருத வேண்டாம். லூத்தரும், எட்டாம் ஹென்றியும் உருவாக்கிய மதங்கள் இன்று ஆயிரக்கணக்கில் உடைபட்டுக் கொண்டே போகிறதே? அதற்கு காரணம், அங்குள்ள போதகர்களுக்கு குடும்பம் என்பது இருப்பதாலேயே. (விவிலியம் மட்டுமே என்கிற அவர்களின் கோட்பாடும் ஒரு காரணம்).
அப்படி என்றால் கத்தோலிக்க மதம் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் துறவறம் என்கிற அமைப்பு வேண்டும். திருச்சபையின் அதிகாரங்கள் அவர்களிடமே இருக்க வேண்டும்.
அவர்களே நமது ஏழு அருட்சாதனங்களையும் நிறைவேற்ற வேண்டும். நமது ஞானத்தந்தையர்களுக்கு நம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும். இதுவரையில் இந்நிலையே உள்ளது. இது இன்னும் தொடர வேண்டும்.
அப்படி என்றால் குருக்களில் சிலர் தவறு செய்கின்றனரே? அவர்களால் நமது கத்தோலிக்க மதம் இழிவுபடுத்தப்படுகிறதே என்று கேட்கலாம்.
குருக்களோ, கன்னியர்களோ வானத்தில் இருந்து குதித்தவர்கள் அல்லர். அவர்கள் நம்மிடமிருந்து சென்றவர்களே. அவர்கள் பாவ வாழ்க்கை வாழ்கிறார்கள் என்றால், அதற்கு நாமே பொறுப்பு. நாமே அவர்களை உருவாக்குகிறோம். அவர்களைக் குற்றச்சாட்டும் முன், நம்மை ஒரு முறை பார்ப்போம்.
நாம் பணத்தின் பின் அலைகிறோமோ? நாம் பிறர் மீது பொறாமை கொள்கிறோமா? நாம் சினிமா, நாடகம், கிரிக்கெட், மொபைல் என்று நேரத்தை வீணடிக்கிறோமோ? நாம் அடுத்த பெண்களை/ஆண்களை தவறான பார்வையில் பார்க்கிறோமா?
நாம் தனியாக இருக்கும் போது, அசிங்கமான படங்களைப் பார்க்கிறோமா? நாம் பழி உணர்ச்சியில் வாழ்கிறோமா? நாம் மிதமிஞ்சிய அளவு உணவு உண்கிறோமா? நாக்கை கட்டுப்படுத்தி வாழ்கிறோமா? வீடு, கார், ஆடைகள், திருமணம் என்று அடுத்தவரோடு போட்டி போட்டு செலவு செய்கிறோமா? மொத்தத்தில் நமது ஊனியல்பின் நாட்டங்களுக்கு அடிமையாக வாழ்கிறோமா?
இப்படி நாமே பெரும்பாவத்தில் வாழ்ந்து கொண்டு வருகிறோம்! அப்படி இருக்கையில் நம்மால் எப்படி துறவற சபையினரை நோக்கி குற்றம் சுமத்த முடியும்? நம்மைப் போல் தானே அவர்களும் இருப்பர்.
முன்பெல்லாம் சாமியார்கள் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தார்கள் என்றால், அன்றைய கத்தோலிக்கர்களும் ஒழுக்கமான வாழ்வு வாழ்ந்தனர். இன்று சாமியார்கள் ஒழுக்கமான வாழ்வு வாழவில்லை என்றால், நாம் ஒழுங்கான வாழ்வு வாழவில்லை என்பதுதானே காரணம்?
ஆகையால் குருக்களை குற்றஞ்சாட்டுவதை விடுத்து, நாம் திருந்தி வாழ முயல்வோம். இல்லறத்தில் துறவற வாழ்வை வாழ்வதே நமக்கான ஒரே வழி. அளவோடு உண்போம். எளிமையான வாழ்வு வாழ்வோம்.
கற்போடு இல்லறத்தைப் பேணுவோம்.சினம் தவிர்ப்போம். பொறாமை, பாலியல் எண்ணங்கள், பழி உணர்வு தவிர்ப்போம். பணத்தின் பின் ஒட வேண்டாம். பிறரன்புப் பணிகள் செய்வோம்.
கோயிலுக்குச் செல்லும் போது, கண்ணியமான ஆடைகளை அணிவோம். குருக்களோடு பெண்கள் பேசும் போது, தேவையற்ற பேச்சுகளை தவிர்ப்போம். அவர்களை நாம் நமது தந்தையாகவே பார்க்கிறோம் என்பதை குருக்களுக்கு உணர்த்துவோம். குருக்களுக்கு தகுந்த மரியாதையை அளிப்போம்.
இதுவே நமது மதத்திற்கு நல்ல குருக்களையும், கன்னியர்களையும் பெற்றுத் தரும். ஒரு குருவோ, கன்னியரோ தவறு செய்தால், அவர்களுக்காக செபம் செய்வோம்.
இறை அழைத்தல் மிகவும் குறைந்து போய்விட்ட காலம் இது. இன்றையச் சூழலில் எந்த இளைஞரும் துறவற அழைப்பிற்கு செவி கொடுப்பதில்லை. குருக்களின் எண்ணிக்கை, ஒட்டுமொத்த கத்தோலிக்கர்களின் எண்ணிக்கையில் ஒரு விழுக்காட்டிற்கும் குறைவாகவே உள்ளது. இதுதான் இன்றைய நிலை.
இப்படயானச் சூழலில் இருக்கும் குருக்களையும் விரட்டி விட்டால், நமது கத்தோலிக்கச் சமையம் அழிந்து விடும். நமது கத்தோலிக்க மதத்தைத் தாங்குவது குருக்களே என்பதை மனதில் நிறுத்துவோம். அவர்களுக்காகச் செபிப்போம்.
செபமாலை என்றுமே கத்தோலிக்க மதத்தைக் காத்து வந்துள்ளது. ஆகையால் நாம் தினமும் செபமாலை செய்வோம். அதில் ஒரு பத்து மணியை துறவிகளுக்காக ஒப்புக் கொடுப்போம்.
இதுவே கத்தோலிக்க மதம் தழைத்தோங்க நமக்கு உள்ள ஒரே வழி...👌❤️
- Frantony David