Monday, April 12, 2021

மகளிர் தினம் – 2021

 

மகளிர் தினம் – 2021

 

பெரும்பாலும் நாம் கொண்டாடுகின்ற தினங்கள் அனைத்துமே வெறும் சம்பிரதாயமாக  மாறிவிட்ட இன்றைய காலகட்டத்தில் , நூறு ஆண்டு கால போராட்ட வரலாற்றை தன்னகத்தே  கொண்ட இந்த மளிர் தினத்தின்  நிலைமையோ அதைவிட பரிதாபம். 

 கி.பி. 1800 களின் பிற்பகுதியில் தொடங்கி வளர்ச்சி அடைந்த நாடுகளில் உழைக்கும் வர்க்கத்தினரால் ஆங்காங்கே  போராட்டங்கள் நடந்து கொண்டிருந்த சூழ்நிலையில், 1908 இல் அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் 15000 பெண் தொழிலாளர்கள் குறைந்த வேலை நேரம், சரிவிகிதச் சம்பளம் மற்றும் ஓட்டுரிமை வேண்டி ஒரு மாபெரும் பேரணியை நடத்துகின்றனர்.

 அதனைத் தொடர்ந்து 1910 ஆம் ஆண்டு நடந்த உழைக்கும் மகளிரின் சர்வதேச மாநாட்டில் மிகச் சிறந்த சோஷலலிசப் பெண்மணியான கிளாரா சட்கின் இந்த நாளை சர்வதேச மகளிர் தினமாக கொண்டாடவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைக்கிறார். அதனை ஏற்று 1911 ஆம் ஆண்டு  முதல்  சர்வதேச பெண்கள் தினம் ஆஸ்த்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் சுவிசர்லாந்திலும் கொண்டாடப்பட்டது. 

இது ஒருபுறம் இருக்க, 1917 இல் ரஷ்யாவில் நடந்த வரலாற்றுப் புகழ் பெற்ற “Bread and Peace” போராட்டம் தான் மார்ச் 8 ஐ சர்வதேச மகளிர் தினமாக தீர்மானிப்பதற்கான காரணியாக அமைந்தது.

 உலக அமைதியைப் புரட்டிப் போட்ட முதல் உலகப் போர் முடியும் தருவாய் அது. ஏராளமான உயிர்ச் சேதங்களையும், பஞ்சம் பட்டினியையும் மட்டுமே மிச்சம் வைத்தது முதல் உலகப் போர்.  இதில் அளவிட முடியாத இழப்பை அடைந்தது ரஷ்யா.  இதற்கு மேலும் போரில் ஈடுபட முடியாது - ரஷ்யப் படைகள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று  ரஷ்ய மக்கள் எழுப்பிய முழக்கங்கள் விண்ணைப் பிளந்தன.  ஆனால் மனாசாட்சியற்ற சார் (Tsar) மன்னனின் மனதை மட்டும் அவை ஏனோ தொடவே இல்லை.  

1917  -  மார்ச் 8  - மகளிர் தினத்திற்கான விதை  விதைக்கப்பட்ட திருநாள்.  பொறுத்தே பழகிய பெண்கள் கூட்டம் அன்று முதல் முறையாக மன்னன் சாரை (Tsaar) எதிர்த்து நின்றது .  அடக்க வந்த ராணுவமும் புரட்சி செய்த பெண்கள் பக்கம் நின்றுவிடுகின்றனர். இவர்களோடு போல்ஷ்விக்குகளும் இணைகின்றனர். இதில், பல உயிர்களைப் பலி வாங்கிய பிறகே சார் மன்னனின் முடியாட்சி முடிவிற்கு வந்தது. போராட்டம் வெற்றி பெற்றது.

இப்படிப் பல போராட்டங்களைப் பெண்கள் உலகெங்கிலும் முன்னெடுத்த நிலையில், 1975 ஆம் ஆண்டை ஐ நா சபை பெண்கள் ஆண்டாக அறிவித்தது. உலகெங்கிலும் பல்வேறு தினங்களில் மளிர் தினம் கொண்டாடப்பட்டு வந்த நிலையில் ஐ நா சபை ஏதாவது ஒரு நாளை சர்வதேச மகளிர் தினமாக தீர்மானிக்க உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்தது. எல்லா நாடுகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்ட மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்து 1977 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  அன்றிலிருந்து இன்று வரை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி சர்வதேச மகளிர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த மாபெரும் வரலாறு புரியாமல், நாம், மகளிர் தினத்தை சமையல் போட்டிகளுக்கும் கோலப் போட்டிகளுக்குமான தினமாக மாற்றிவிட்டது தான் வேதனையின் உச்ச கட்டம்.  சமத்துவத்திற்கும் பெண் விடுதலைக்குமான இந்த நாளை நாம் மறுபடியும் நம் கொண்டாட்டங்களுக்கான திருநாளாக மாற்றி விட்டது நம் அறியாமையின் வெளிப்பாடு. பெண்களுக்கென்றே புனையப்பட்ட புனிதங்களில் இருந்து இம்மியளவு கூட நாம் பிசக விரும்பவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.

இதில் பெண்களை மட்டுமே குறைசாட்டுவதில் பயனில்லை.  தெய்வத் திருமறை என்று போற்றப்படும் திருக்குறள் முதற்கொண்டு சங்ககாலப் பாடல்கள் பல பெண்களைச் சிறப்பிப்பதாக நினைத்துக் கொண்டு சமத்துவத்திற்கும் பெண்களின் சுயமரியாதைக்கும் சமாதி கட்டிவிட்டன என்பது தான் என் தாழ்மையான கருத்து.

“தெய்வம் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள்

பெய்யெனப் பெய்யும் மழை.” - திருக்குறள்

ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என்று திருவள்ளுவர் நினைக்கவில்லையோ என்று தோன்றுகிறது இத் திருக்குறளைப் படிக்கையில்.

“வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது

நீணில வேந்தர் கொற்றஞ் சிதையாது

பத்தினிப்பெண்டிர் இருந்த நாடு”  - சிலப்பதிகாரம்

ஏன் கற்புடை ஆண்கள் இருந்த நாடு என்று இளங்கோவடிகள் பாடவில்லை என்ற ஐயம் எழத்தான் செய்கிறது.

“கற்பு நிலை என்று சொல்ல வந்தால் அதை ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவில் வைப்போம் “ – என்று சொன்ன பாரதி என் கண்முன் இங்கே விஸ்வரூபம் எடுத்து நிற்கிறான். அவனையே ஒட்டு மொத்த பெண்களின் பிரதிநிதியாகப் பார்க்கிறேன்.

 

இவ்வளவு இடர்பாடுகளையும் தாண்டி பெண் சமுதாயம் இன்று பல்வேறு துறைகளில் சாதனை படைப்பதற்கு பாரதியின் துணை தேவைத்தான் படுகிறது.

“பெண்கள் எல்லாவிதமான அடக்கு முறைகளில் இருந்தும் விடுதலை பெறாமல் சுதந்திரம் என்பது சாத்தியமில்லை” -   என்ற நெல்சன் மன்டேலாவின் வரிகளை நன்றியோடு நினவு கூற கடமைப்பட்டு இருக்கிறோம்.

எத்தனை கரங்கள் பெண் விடுதலைக்காக நீண்டாலும், பெண்கள் முன்வராமல் பெண் விடுதலை என்பது சாத்தியமில்லை என்பதே மறுக்கமுடியாத உண்மை.  பெண்கள் கால் பதிக்காத துறைகளே இல்லை என்று பெருமை பேசும் அதே வேளை பெண்களின் மனப்பாங்கு இன்னும் மாறவேண்டியது நிறையவே உள்ளது என்பதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.

“Generation equality” –   இந்த தலைப்பைத் தான் இந்த வருட மகளிர் தினத்தின் கருப் பொருளாக ஐ நா சபை தேர்ந்தெடுத்து இருக்கிறது.  Equality – சமத்துவம் – இருக்கிறாதா நம் நாட்டில்?  கொடுத்தாலும் மறுக்கின்ற மகளிர் இருக்கின்ற நாடுதான் நம் தாய்த் திருநாடு.  தந்தை சுமக்க, உடன் பிறந்தவர்கள் சுமக்க, கட்டிய கணவன் சுமக்க இறுதியில் நான்கு பேர் சுமக்க என்று பெரும்பாலான பெண்களின் பயணம் இப்படியாகவே முடிந்து விடுகிறது. படித்த பெண்கள் கூட இந்த நிலையில் இருந்து வெளிவர விரும்புவதில்லை.

 இப்படிப் பட்ட பெண்கள் இருக்கும் இதே மண்ணில் தான் நாட்டிற்காகத் தன் இன்னுயிரையும் நீத்த கமலேஷ் குமாரியும் பிறந்தார் என்பதனை நாம் மறந்து விடக் கூடாது. 2001 டெல்லி பாராளுமன்ற தாக்குதலை யாரும் மறந்து இருக்க முடியாது.  தீவிரவாதிகளை முதலில் அடயாளம் கண்டு தன் உயிரை துச்சமென மதித்து நாட்டின் தன்மானத்தை நிலைநிறுத்திய சிங்கப் பெண். அசோக் சக்ரா விருதின் சொந்தக்காரி.  இறந்த பிறகு கிடைத்த விருது. தாயின் கையிலே ஒப்படைக்கப்படுகிறது.  கையில் விருதுடன் அந்தத் தாய் பேசியது இன்னமும் நம் காதுகளில் ஒலித்துக் கொண்டு இருக்கிறது.  தன்னுடைய இரண்டவது மகளையும் அதே பணியில் அமர்த்துவேன் என்ற அவருடைய தீரம் நமக்கெல்லாம் சிறந்ததொரு  பாடம்.

பெண்கள் கல்வி அறிவு பெற தன் மீது வீசப்பட்ட சாணங்களையும் கற்களையும் சாவித்ரி பாய் பொறுத்துக் கொள்ளாமல் இருந்து இருந்தால் இன்று பெண் கல்வி என்பது கானல் நீராகத்தான் இருந்திருக்கும். அவரின் தன்னம்பிக்கையும் துணிச்சலும்  நமக்கெல்லாம் வேண்டும்.

ஒவ்வொரு துறையிலும் முதலில் காலடி எடுத்து வைத்த முதல் பெண்களின் வீர வரலாற்றை நாம் தேடித் தேடிக் கற்க வேண்டும். இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் டாக்டர் முத்துலட்சுமி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.  ஆனால், அதற்காக அவர் பட்ட இன்னல்களை அறிந்தவர் வெகு சிலரே. அவர் கல்லூரியில் பயின்ற போது பெண் என்ற காரணத்தினால் அமர்ந்து படிக்க அனுமதி இல்லையாம். எந்த துறைத் தலைவர் தன்னை      நிற்க வைத்துப் பாடம் நடத்தினாரோ அவரே தன்னைப் பாராட்டும்படி தங்கப் பதக்கம் வென்றவர் டாக்டர் முத்துலட்சுமி அம்மையார். நின்றே படித்த அந்தப் பெருந்தகையால் தான் இன்று பெண் இனம் தலை நிமிர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் தமிழகத்திலே   நிறைவேறியதும் அம்மையார் அவர்களால் தான் என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது. அதற்காக அவர் பட்ட இன்னல்கள் கொஞ்ச நஞ்சமல்ல.  இது தேவையில்லாத சட்டம் என்று மறுத்தவர் பலர் உண்டு. ஆனாலும் கலங்கவில்லை. அவரின் விடா முயற்சியே இன்றைய பெண் சமுதாயத்தின் மறுமலர்ச்சிக்குக் காரணம்.

இன்றைய பெண்களின் இத்துனை உயர்வுக்கும் யாரோ ஒரு சிலரின் தியாக வாழ்க்கையே அடித்தளமாக இருக்கிறது என்பதை நாம் கருத்தில் கொள்ளவேண்டும்.  இத்தகு மாற்றங்கள் ஓர் இரவில் ஏற்பட்டது அல்ல என்பதையும் கடந்து வந்த பாதையின் காய வடுக்களையும்  நம் அடுத்த தலைமுறையினருக்கு நாம் கடத்தியே ஆகவேண்டும். இறந்த காலத்தின் வலிகள் மறந்துவிட்டாலோ அல்லது மறைக்கப் பட்டு விட்டாலோ எதிர்காலம் என்பது இருண்டு விடும்.

அறியாமை என்னும் இருள் பெண் இனத்தை அழிக்காமல் இருக்க வேண்டுமானால் கல்வி என்ற தீபம் எப்போதும் அணையாமல் இருக்க வேண்டும்.

கல்வி, வேலைவாய்ப்பு, உடல் ஆரோக்கியம், உணவு, குடும்ப வேலை இப்படி அனைத்திலும் என்று சமத்துவம் வருகிறதோ அன்றே உண்மையான மகளிர் தினம் நம் வசப்படும்.

 

கு.பச்சையம்மாள்

அரசு பள்ளி ஆசிரியை

புதுச்சேரி.

 

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...