Monday, April 12, 2021

இன்றைய சமூகத்தில் சாவித்ரிபாயின் பங்கு

 

இன்றைய சமூகத்தில் சாவித்ரிபாயின் பங்கு

 

“என் மேல் கற்களையும் மாட்டுச் சானத்தையும் வீசுகிறார்கள்.  அதையும் மீறி கல்வி கற்பிக்க செல்கிறேன்.  ஏனெனில், கல்வியின் மகத்துவம் எனக்குத் தெரியும்.”

“விஷப் பாம்புகளைத் தொடும் நமக்கு சக மனிதர்களிடம் மட்டும் தீண்டாமை ஏன்?”

“இச் சமூகத்தில் பெண்களுக்கான கல்வி மிகாவசியமானது. ஆனால், பெண்கள் கல்வி கற்பதையே பலர் பாவமாக கருதுகிறார்கள்.”

“கடவுளுக்குச் சேவகம் செய்வதைவிட, கடவுளைப் போன்ற மனிதர்களுக்கு சேவகம் செய்வது சிறந்தது; பிறருக்கு கல்வி கற்றுத் தருவது அப்படியானது.”

இவர்கள் ஜதிக்காக உயிரைக்  கொல்கிறார்கள். ஒரு மனிதனின் உயிரை விட ஜாதி பெரியதா?

“ கல்வி அறிவினால் மட்டுமே ஒருவர் தன் தாழ்ந்த நிலையை அழித்து உயர்ந்த நிலையை அடைகிறார் என்பதை நான் ஆழமாக நம்புகிறேன்”

“அறிவுடமை இல்லையேல் எதுவுமில்லை”

-        இவையெல்லாம் சாவித்ரிபாயின் சிந்தனைகள்.

இந்த சிந்தனைகள் உதித்த காலம் 19 ஆம் நூற்றாண்டு.   கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்திலேயே சாவித்ரிபாய் இவற்றையெல்லாம் சிந்தித்து இருக்கிறார். இவற்றில் ஒன்றைக் கூட நாம் இன்னும் கடந்து போனதாகத் தெரியவில்லை.

சாவித்ரியின் வாழ்க்கை ஏட்டினை சற்றே புரட்டிப் பார்த்தோமேயானால், டிஜிட்டல் உலகம் என மார்தட்டிக் கொள்ளும் நாம், சிந்தனையில் எவ்வளவு பின் தங்கி இருக்கிறோம் என்பதனை உணர முடியும்.

பெண்கள் மீதான அடக்கு முறையும், தீண்டாமைக் கொடுமையும், மூட நம்பிக்கைகளும் இந்த சமூகத்தில் புரையோடிப் போயிருந்த காலம்தான் சாவித்ரியின் காலம்.

பெண்கள் படித்தாலே பாவம் என்ற எண்ணம் கொண்ட மனிதர்கள் மத்தியிலே, பெண் சமுதாயத்திற்கே கல்வி விளக்கு ஏற்றிய கருணைக் கடல் சாவித்ரி.  கல்வியே ஒரு சமுதாயத்தை கரைசேர்க்கக் கூடிய கலம் என்று உறுதியாக நம்பிய சாவித்ரி எதிர் கொண்ட சோதனைகள் ஏராளம். 

ஆனால், இன்றைய சமுதாயத்திலே, சாவித்ரிபாய் இன்னும் அதிக உத்வேகத்துடன் செயல்பட வேண்டியுள்ளது.  ஏனென்றால் அன்று சாவித்ரி சந்தித்த அத்துனை பிரச்சனைகளும் இன்று நவீன வடிவத்திலே கண்ணுக்குப் புலப்படாத எதிரிகளாக உருவெடுத்துள்ளன.

ஸ்டேட் போர்ட், சிபிஎஸ்இ , இன்டெர்னேஷனல் என்று வெவ்வேறு கல்வி முறைகளில் இங்கே தீண்டாமை தலைவிரித்தாடிக் கொண்டு இருக்கிறது.  ஜதிக்கொரு கல்வி முறையாகிப் போய்விட்டது. அடித்தட்டு வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி முறை.  ஆதிக்க வர்க்கத்தினருக்கு ஒரு கல்வி முறை என்று இங்கே தீண்டாமை நவீனமயமாக்கப் பட்டுள்ளது.  இந்தச் சூழலில் சாவித்ரிபாய் இன்னும் வீறு கொண்டு எழ வேண்டியுள்ளது.

இத்தனையும் சமாளித்து ஒரு அடித்தட்டு வர்க்கத்து மாணவன் முனைவர் பட்டத்திற்கு முன்னேறி விட்டால், அங்கே அவனுக்கு காத்திருப்பதோ தூக்குக் கயிறுதான்.  ஆம், 2016, சனவரி 17,  ரோஹித் வெமுலாவின் தற்கொலையைத்தான் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன்.  சாவித்ரியின் அத்துனை போராட்டங்களும் தவிடுபொடியாகிவிட்டதே என்ற வலியும் வேதனையுமே மிச்சம் நமக்கு. இப்படிப்பட்ட நிறுவனக் கொலைகள் சமீபத்திய JNU இஸ்லாமிய மாணவி தற்கொலை வரை தொடர்ந்து கொண்டு தானே இருக்கிறது.

தாழ்த்தப்பட்டவர்களையோ அல்லது பெண்களை மட்டுமோ குறிவைப்பதில்லை இன்றைய அரசியல்.  ஏழைகள் ஏழைகளாகவே இருக்க வேண்டும்.  பொருளாதார ரீதியில் பின் தங்கிய, முதல் தலைமுறையாக கல்வி கற்க வரும் மாணவர்களுக்கு NEET என்ற பெயரிலே இங்கே கல்வி கேள்விக் குறியாகிவிட்டது.  அது புரியாமல், ஆதிக்க வர்க்கத்தினர் மட்டுமே வாழ வேண்டும் என்ற அடாங்காத வெறியினால் உருவாக்கப்பட்ட புதிய கல்விக் கொள்கையை நம்மில் சிலரே கையில் ஏந்திக் கொண்டு அலைந்து கொண்டு இருக்கிறோம். 

இது மட்டுமா? ஜாதியின் பெயரில் நடந்தேறும் ஆணவக் கொலைகளை எந்தக் கணக்கில் பட்டியலிடுவது?  அம்ருதாவின் காதல் கணவன் ப்ரணய் கொலை வழக்கு, உடுமலை சங்கர் கொலை வழக்கு, தர்மபுரி சம்பவம் என நாட்டை உலுக்கிய ஆணவக் கொலைகளுக்கு யார் நீதி கேட்பது?

உலக அரங்கிலே அறிவியல் தொழில் நுட்பத்தில், விண்வெளி விஞ்ஞானத்தில் இந்தியாவைக் கண்டு மிரளுகிறது நாசா.  அதே இந்தியாவில் தான் மேட்டுப் பாளையம், நடூரில் , தீண்டாமைச் சுவர் இடிந்து 17  பேர் உயிர் இழக்கின்றனர். இப்படி முரண்பாடுகளைக் கொண்ட நம் தேசத்தை எந்த இடத்தில் பொருத்துவது? முன்னேறிய நாடுகள் வரிசையிலா? பின் தங்கிய நாடுகள் வரிசையிலா?

இவற்றையெல்லாம் சீர்படுத்த சாவித்ரி சாதாரணமாக வந்து விடக் கூடாது.  விஸ்வரூபம் அல்லவா எடுக்க வேண்டியுள்ளது.

சாவித்ரியின் தைரியமும் மனவலிமையும் சமுதாயத்தின் மீது பற்று கொண்ட நம்மைப் போன்றவர்களுக்கு அருமருந்து.  நிகழ்கால சமுதாயத்தைப் புரட்டிப்போட முடியுமா? என்பது தெரியவில்லை.  ஆனால் எதிர்கால இந்தியாவின் தூண்களை உளி கொண்டு செதுக்க நம்மைப் போன்றவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே என் தார்மீக எண்ணமாகும்.

சக மனிதர்களின் கேலிப் பேச்சுக்கும் , கல் எறிதலுக்கும் தலை வணங்காமல் இருந்ததால்தான் சாவித்ரியால் பெண் கல்வி சாத்தியமானது.  சமூகக் கொடுமைகளுக்கு சமாதி கட்ட முடிந்தது.

சாவித்ரியின் சாதனைகளில் முக்கியமாக நாம் எண்ணிப் பார்க்க வேண்டியது விதவைப் பெண்களின் நல்வாழ்விற்காக அவர் மேற்கொண்ட  பணிகள். 

1800 – களில் அவர் ஆரம்பித்த போராட்டம், விதவைகளின் வாழ்வில் விளக்கேற்றி இருக்கிறதா? என்றால் வெளிச்சத்தின் கதிர்கள் அவர்கள் வாழ்வில் பாய வேண்டிய தூரம் இன்னும் அதிகம் இருக்கிறது என்பதைத்தான் நமக்கு காட்டுகிறது.

இன்றளவும் விதவை மறுமணம் என்பது, பாதிக்கப்பட்ட பெண்களாலேயே ஏற்றுக் கொள்ள முடியாமல் இருக்கின்ற நிலைமைதான் நீடிக்கிறது.  குடும்ப கௌரவம் விதவைகளின் வாழ்க்கையைக் குட்டிச் சுவராக்குகிறது.  கற்பு என்ற பெயரில்   நேர்மையான திருமண வாழ்க்கையை வழங்க மறுக்கும் இந்த சமுதாயம் அவளின் தலைமறைவு வாழ்க்கையை, பவம் தனியாக இருப்பவள் தானே என தட்டிக் கொடுத்துச் செல்கிறது.  சில வெறி கொண்ட ஆண்களின் வசதிக்காக!  சுய கௌரவத்தை பெண் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில்தான் நாம் இன்னமும் இருக்கிறோம் என்பதை மறந்துவிடக் கூடாது. முதலில் நாம் நம்மை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.  எந்த இடத்திலும் பெண்மை தலை குனியக் கூடாது என்பதை பசு மரத்து ஆணி போல நம் பிள்ளைகளின் மனதில் பதிய வைக்க வேண்டியது நம் தலையாய  கடமையாகும்.

சமத்துவ சமுதாயம் படைக்க வேண்டும் என்பதிலே சாவித்ரியின் பங்கு அளவிட முடியாதது.  1890 – ல் மகாத்மா ஜோதிராவ் பூலே இறந்து விடுகிறார்.  அவர்களின் வளர்ப்பு மகன் யஷ்வந்த் ஈமச் சடங்கினைச் செய்வதற்கு பூலே உறவினர்கள் எதிர்ப்பு  தெரிவிக்கின்றனர்.  அந்த சமயத்தில் துணிச்சலாக முடிஉவெடுக்கின்றார் சாவித்ரி.  ஈமச் சடங்கினைத் தானே செய்து முடிக்கின்றார். தன் கணவரின் உடலுக்கு அவரே தீயும் வைக்கிறார்.

இந்த இடத்திலே இன்னொரு விஷயத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விருப்பப் படுகிறேன்.  சமீபத்திலே நம் நாட்டின் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தபோது அவரின் வளர்ப்பு மகள்தான் வாஜ்பாய் உடலுக்குத் தீ வைக்கிறார். இந்த சம்பவத்தை ஊடகங்கள் பெரிய அளவிலே பேசிற்று.

 

சற்றே சிந்தித்துப் பாருங்கள்.  கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கு முன்னரே இது போன்ற துணிச்சல் ஒரு பெண்ணுக்கு வரவேண்டுமானால் எவ்வளவு மனவலிமை படைத்தவராக இருக்க வேண்டும்? 

இத்தனை கொடுமைகளையும் புறந்தள்ளி, புதியதொரு சமுதாயம் படைக்க, சமூகப் புரட்சி  செய்த சமூகப் போராளி , இந்தியாவின் முதல் பெண் ஆசிரியை சாவித்ரிபாய் பூலேவின்வழினின்று , அவரின் பங்காற்ற ஆயிரம் ஆயிரம் சாவித்ரிபாய்கள் ஒன்று திரள வேண்டும்.  ஒன்று படுவோம்!

 

விழித்திடு! எழுந்திடு! கற்பித்திடு!

பழமையை எதிர்த்திடு – விடுதலையடைந்திடு!

-        சாவித்ரிபாய் பூலே.

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...