Thursday, June 24, 2021

மமதை


*மமதை*


முன்னொரு காலத்தில் , ஒரு நாட்டின் இளவரசனுக்கு திடீரென்று பைத்தியம் பிடித்து விட்டது . அரசன் மிகவும் கவலைப்பட்டான்.  அவனுக்குள்ள ஒரே மகன், ஒரே வாரிசு, நாட்டை ஆளவேண்டியவன்  பைத்தியக்காரனாக ஆகி விட்டான்.


 நாட்டிலுள்ள எல்லா மந்திரவாதிகளும், மருத்துவர்களும் அழைக்கப்பட்டார்கள். எல்லா முயற்சிகளும் செய்து பார்த்தாகிவிட்டது. ஒன்றிலும் பயன் இல்லை.


 ஒருவராலும் இளவரசனின் பைத்தியத்தைக் குணமாக்க முடியவில்லை. அவன் பைத்தியமாகவே இருந்து வந்தான். அவன் பைத்தியமான தினம் முதல் அவனுடைய எல்லா ஆடைகளையும் அவிழ்த்து எறிந்து விட்டான். அவன் அம்மணமாக ஒரு மிகப் பெரிய மேஜையின் கீழ் அமர்ந்து கொண்டான்.  அவன் தன்னை ஒரு அடைகாக்கும் கோழியாக எண்ணிக் கொண்டான்.


அரசனும் தன் மகன் மீண்டும் பைத்தியம் தெளித்து வந்துவிடுவான் என்ற நம்பிக்கையை இழந்து விட்டான். இளவரசன் நிரந்தரமாக பைத்தியக்காரனாகி விட்டான்.


எவராலும் அவனுடைய பைத்தியத்தை தெளிய வைக்க ஏதும் செய்ய முடியவில்லை.


 ஒருநாள் ஒரு ஞானி அரண்மனையின் கதவைத் தட்டி அரசனிடம் சொன்னார்,   "இந்த இளவரசனை நான் குணப்படுத்த எனக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுங்கள்" .


 மன்னருக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டது .

ஏனெனில் இந்த ஞானியே பார்ப்பதற்கு இளவரசனைவிட பெரிய பைத்தியக்காரனைப் போல் இருந்தார் .


ஞானி மீண்டும் சொன்னார் : " என்னால் அவனைக் குணப்படுத்த முடியும்".


ஞானிக்கும் ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டது . 


ஞானிக்கு அனுமதி கொடுத்த அந்தக் கணமே  ஞானி தன்னுடைய ஆடைகளை முற்றிலுமாக கழற்றி எறிந்துவிட்டு இளவரசன் இருந்த பெரிய மேஜையின் அடியில் அடைகாக்கும் கோழிபோல் உட்கார்ந்து கொண்டார்.


இதைப் பார்த்த பைத்தியக்கார இளவரசனுக்கு குழப்பம் ஏற்பட்டது . 


அவன் கேட்டான் : " நீ யார் ? நீ என்ன செய்வதாக எண்ணிக்கொண்டு இங்கு இருக்கின்றாய்?".


 ஞானி சொன்னார் : " நான் ஒரு அடைகாக்கும் கோழி , உன்னை விட அனுபவம் அதிகமாக உடையவன்". 


இளவரசன் கேட்டான் " நீ அடைகாக்கும் கோழியாக இருந்தால் சரி , ஆனால் நீ பார்ப்பதற்கு மனிதனைப் போல் உடையுடன் இருக்கிறாயே?".


 ஞானி சொன்னார் : " தோற்றத்தை வைத்து மதிப்பிடாதே. என்னுடைய உணர்வை பார், என்னுடைய ஆன்மாவைப் பார், நான் உன்னைப் போன்று ஒரு அடை கோழிதான்".


அன்றிலிருந்து அவர்களிருவரும் நண்பர்களாகிவிட்டார்கள்.


சில நாட்கள் கழிந்தன.


திடீரென்று ஒருநாள் ஞானி உடை அணிய ஆரம்பித்தார். இளவரசன் கேட்டான் : " நீ என்ன செய்கிறாய்? உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?.எங்கேயாவது அடைகோழி மனிதர்களைப் போல் உடை உடுத்திக் கொள்ளுமா?".


ஞானி சொன்னார் : " இந்த மனித முட்டாள்களை ஏமாற்றவே நான் இப்படிச் செய்தேன். உணர்வில் நான் ஆடை அணிந்தாலும் என்னில் எவ்வித மாற்றமுமில்லை . என்னுடைய அடைகாக்கும் தன்மை அப்படியே தானிருக்கிறது .மனிதர்களைப் போல் ஆடை அணிந்துள்ளதால் நான் மாறிவிட்டதாக நீ நினைக்காதே?".


இளவரசன் ஞானியின் பேச்சைக் கேட்டு அவர் ஆடைகள் அணிவதற்கு ஒத்துப் போனான். சில நாட்கள் கழித்து ஞானி இளவரசனையும் ஆடைகள் அணிய வற்புறுத்தினார். 


திடீரென்று ஒரு நாள் ஞானி தனக்கு அரண்மனையிலிருந்து உணவு வர ஏற்பாடு செய்தார். 


இப்பொழுது இளவரசன் மிகவும் உஷாராகி , " நீ என்ன மிகவும் கெட்டுப் போய் விட்டாயே , நீ இந்த மனிதர்கள் உண்பதைப் போன்றா உண்ணப் போகிறாய்? நாம் எல்லாம் அடைகோழிகள்! 

நாம் அடைகோழிகள் உண்பதைப் போலதான் உண்ண வேண்டும்."


ஞானி சொன்னார் : " இந்த அடைகோழியைப் பொறுத்தவரை எதுவும் வித்தியாசத்தை ஏற்படுத்தப் போவதில்லை. நீ எதையும் உண்ணலாம், நீ எல்லாவற்றையும் அனுபவிக்கலாம். நீ மனிதனைப் போல வாழ்ந்து கொண்டே உன்னுடைய அடைகோழித் தன்மைக்கு உண்மையானவனாக இருக்கலாம்."


இப்படி கொஞ்சம் , கொஞ்சமாக ஞானி இளவரசனை மீண்டும் மனித உலகிற்கு அழைத்து வந்தார். இளவரசன் இப்பொழுது முற்றிலும் மனிதனாக மாறிவிட்டான் . 


உங்களுக்கும் எனக்கும் இதே கதைதான்.


ஞாபகத்தில் கொள்ளுங்கள் , நீங்கள்

உங்களை உடலால், மனதால், நான், என்னை சுற்றியுள்ளவர்களை விட ஞானம் சிறந்தவன், என்னை யாராலும் வெற்றிபெற முடியாது என்று மமதை கொண்டு வாழ்வது சாதாரண வெளியுலக மக்களுக்கு ஒரு  பைத்தியகாரனாய் மட்டுமே புலப்படும். 


இளவரசனை போன்ற பைத்தியகாரர்களை சரிசெய்ய முயன்று 

எல்லா வல்லுநர்களும் தோற்றுப் போய் விட்டார்கள்.  ஆனால் ஒருநாள் உங்கள் பைத்தியகாரதனத்திலிருந்து தெளிவடைவீர்கள்.  அன்று நீங்கள் வாழ்ந்துகொண்டிருக்கும் மமதையின் வாழ்விலிருந்து விடுபடும்போது ஏதும் அற்றவர்கள் இருப்பதை உணர்வீர்கள்.  


மமதை எனும் பைத்தியத்திலிருந்து விடுபட்டு எதார்த்தம் எனும் மனித வாழ்கைக்குள் நுழைவோம்.


No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...