#விஷ்மயா_நாயர்
🌠
A post by Kavi kavi Rk
ஜாதிகள் பற்றிய சிந்தனை குறைந்து வரும் நிலையில் தன் பெயருடன் ஜாதியை சேர்த்துக் கொண்ட விஸ்மயா நாயர் இறப்பிற்கு ஜாதி மத பாகுபாடு இன்றி அனைத்து மக்களும் கண்டனம்
🔴கேரளாவில்
வரதட்சணை கொடுமையால் கொலை(?) செய்யப்பட்ட விஸ்மயா நாயர் என்ற 23 வயது பெண்
திருமணம் முடிந்து தன் அம்மா வீட்டை விட்டு கணவன் வீட்டுக்கு போகும் போது எடுக்கப்பட்ட போட்டோ இது.
பல மாதங்களாகவே கணவனால் வரதட்சணை கொடுமையை அனுபவித்தாலும் குடும்பமும் சமூகமும் இவரை “அவரோடு அட்ஜஸ்ட் செய்து போ” என்றே திரும்ப திரும்ப சொல்லி இருக்கிறது.
எல்லாவிதத்திலும் தன்னம்பிக்கையாய் வளர்ந்த விஸ்மயா தன் மேட்ரிமோனியலை தானே நிர்வகித்து தன் கணவனை கூட தானே செலக்ட் செய்த விஸ்மயாவால் இந்த இடத்தில் என்ன செய்ய என்று தெரியவில்லை.
கணவன் அடிக்க அடிக்க திரும்ப திரும்ப அட்ஜஸ்ட் செய்தே வாழ்ந்துள்ளார்.
1. நாம் வீட்டுக்கு போனால் அப்பா அம்மாவின் கெளரவம் என்னவாகும்.
2. கஷ்டப்பட்டு திருமணம் செய்து கொடுத்தார்களே அவர்கள் “மகள் நன்றாய் வாழ்வாள்” என்ற எதிர்பார்ப்புகள் வீணாய் போய்விடுமே.
3. என்றாவது திருந்தி விட மாட்டாரா நம் கணவர்.
4. நண்பர்கள் சமூகத்திடம் அவர்கள் முன் மிகப்பெரிய ஆர்பாட்டமாய் திருமணம் செய்து கொண்டோமே. இப்போது அது பெயிலியர் என்று எப்படி சொல்வது. கொஞ்ச நாள் அட்ஜஸ்ட் செய்து பார்ப்போமா ?
5. கணவரை பிரிந்து என்ன செய்வது. டைவோர்ஸ். மறுமணம். இதெல்லாம் என்னால் எப்படி செய்ய முடியும். அதை நினைத்தாலே அயர்ச்சியாக இருக்கிறதே. பயமாய் இருக்கிறதே.
என்று தயங்கி இருக்கலாம். பலர் இப்படி தயங்கிதான் அடி உதைகளை வாங்கி அமைதியாக இருக்கிறார்கள்.
விஸ்மயாவின் அப்பா அம்மா அண்ணன் அவரை கணவனை பிரிந்து வரும்படியாக சொன்னதாக செய்தி சொல்கிறது.
ஆனால் ஒருவேளை விஸ்மயா வீட்டுக்கு வந்து தங்கி இருந்தாலும் அவர்கள் என்ன செய்திருப்பார்கள்.
1. விஸ்மயாவின் அம்மா பெண்ணின் வாழ்க்கை கெட்டு விட்டதே என்று அன்றாடம் சோக கீதம் பாடி இருப்பார். புலம்பி கொண்டிருந்திருப்பார்.
2. அப்பாவும் அண்ணனும் மகள் தங்கையிடத்தில் அதிருப்தி பார்வையை வீசி இருப்பார்கள்.
3. சொந்த பந்தங்கள் எல்லாம் “ என்னம்மா இங்கதான் இருக்கியோ. சமாதானமா போ” என்று தொடர்ச்சியாக அட்வைஸ் செய்திருக்கும்.
பிறந்த வீட்டிலும் விஸ்மயாவுக்கு ஒரு இயல்பான வாழ்க்கை கிடைத்திருக்கவே செய்யாது.
“விஸ்மயா விஸ்மயா உன் கணவனை விட்டு பிரிந்து விட்டாய். ஐயோ நீ தவறு செய்கிறாய். கணவன் தான் உன் வாழ்க்கை” என்ற செய்தியை அப்பா அம்மா அண்ணன் சமூகம் சொந்த பந்தங்கள் என்று அனைவருமே நேரடியாகவும் மறைமுகமாகவும் சொல்லி சொல்லி அவருக்கு பயத்தையும், பதட்டத்தையும் குற்ற உணர்வையும் ஏற்படுத்தி இருக்கும்.
”கணவன் உன்னை அடித்து துன்புறுத்துகிறானா. போய் புகார் கொடு.
இல்லை பிரிந்து வாழவேண்டும் என்றால் இங்கே வீட்டில் வந்து இரு.
அப்படி ஒரு ஆளே இல்லை என்று நினைத்து கொள்.
உனக்கு பிடித்ததை செய். உனக்கு பிடித்த வேலையை தேடி சம்பாதித்து கொள்.
இனிமேல் உன் திருமண வாழ்க்கையை பற்றியே யோசித்துக் கொண்டிருக்காதே.
சொந்த பந்தங்கள் உன்னை விசாரிக்காமல் அப்பா அம்மா நாங்கள் பார்த்து கொள்கிறோம்.
நீ உன் மனதில் குற்ற உணர்வில்லாமல் பதட்டமில்லாமல் பயமில்லாமல் முதலில் ஆகு. அதுதான் இங்கே முக்கியம். உனக்கு எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இரு”
இப்படி ஒரு ஆதரவை பிறந்த வீட்டார் கொடுத்தால் பல பெண்கள் கணவன் செய்யும் கொடுமையை சொல்ல முன்வருவார்கள்.
இங்கே பிறந்த வீடுகளில் கொடுக்கப்படும் சப்போர்ட் புற அளவிலானதே. “வேறு வழியில்லை. இங்கே வந்து இரு. இப்ப என்ன பண்ண “ தொனி சப்போர்டுதான் இங்கே பெண்களுக்கு புகுந்த வீடுகள் கொடுப்பது.
“நீ எதுவும் தவறு செய்யவில்லை. அடி உதையை எல்லாம் நீ பொறுத்துக் கொள்ள வேண்டியதே இல்லை. நீ பிரிந்து இருப்பதுதான் சரி. உனக்கு பிடித்ததை செய். நாங்கள் இருக்கிறோம்” என்ற மாரல், உளப்பூர்வமான, உளவியல் ரீதியான சப்போர்ட்டை நம் பிறந்த வீடுகள் கொடுப்பதில்லை.
அதனாலேயே பல இளம் பெண்கள். பண வசதியுடைய குடும்பத்தில் பிறந்த விஸ்மயா போன்ற பெண்கள் கூட பிறந்த வீட்டுக்கு வர தயங்கி இருக்கிறார்கள்.
ஒரு பெண்ணுக்கான அந்தஸ்து, பாதுகாப்பு மற்றும் செக்ஸ் இந்த மூன்றையும் சமூக ஒப்புதலோடு கொடுக்கும் ஒரே ஜீவனாக அவள் கணவனை இந்திய சமூகம் அளவுக்கதிகமாக கொண்டாட்டமாக பார்க்கிறது.
இளம் பெண்களுக்கும் குடும்பமும் சமூகமும் அப்படித்தான் சொல்லி கொடுக்கிறது.
“மகளே இதுதான் உன் கணவன்.
- இவன்தான் உன் கெளரவம். உனக்கான மதிப்பு இவனை வைத்துதான்.
- இவன்தான் உனக்கு பாதுகாப்பு
- இவன்தான் உனக்கு சாப்பாடு கொடுப்பவன்.
- இவன்தான் உனக்கு சுகம் கொடுக்கும் ஒரே ஜீவன்.
- வாழ்கையின் இறுதி வரை இவன்தான் உனக்கு
இதைத்தான் ஒரு இளம் பெண்ணின் மனதில் இப்போதும் உளவியல்ரீதியாக அனைவரும் புகுத்துகிறார்கள்.
இந்த பிரைன் வாஷ் முறைதான் இளம்பெண்களை கணவரோடு இந்த காலத்திலும் கூட அட்ஜஸ்ட் செய்து கொண்டு போக சொல்கிறது.
“அவருக்கு புக் படிக்கிறது பிடிக்காது. அவருக்கு வீட்ல பகல்ல நைட்டி போடுறது பிடிக்காது. இப்படி பல பிடிக்காதுகளை பெண்கள் ஈசியாக ஏற்றுக் கொண்டு அவர்கள் பிடித்தங்களை நிறுத்திக் கொள்வது இந்த
“அவன் தான் எல்லாமும்” என்ற உளவியல் காரணமாகத்தான்.
இன்னொரு செய்தி படித்தேன்.
விஸ்மயா தன் அம்மாவிடம் “அம்மா அவர் அடிக்கிறார். நான் காலேஜ் பீஸ் கட்டவேண்டும் எனக்கு ஐந்தாயிரம் (5000) ரூபாய் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.
அதற்கு விஸ்மயாவின் அம்மா “என்னிடம் பணம் இல்லையே. நீ உன் கணவனிடமே இன்னொருமுறை கேட்டுப்பார்” என்று சொல்லி இருக்கிறார்.
இதிலிருந்து விஸ்மயாவுக்கோ அவர் அம்மாவுக்கோ சாதரண தொகையான 5000 ரூபாயை ஹேண்டில் செய்யும் உரிமை இல்லை என்று தெரிகிறது.
சட்டென்று கூகிள் பே, பே டி எம் மாதிரி ஆப்ஸ் மூலம் விஸ்மயாவுக்கு வெறும் 5000 ரூபாய் கடத்த முடியாத அளவுக்கு உரிமையில்லாமல் விஸ்மயாவின் அம்மா கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறார்.
அதாவது பணம் என்பது ஆண்களாலே கட்டுப்படுத்தப்படுகிறது.
பெண்கள் வேலைக்கு போக வேண்டும். ஆனால் ஏடிஎம் கார்டு கணவரிடம் இருக்கும்.
சாமி படத்தில் போலீஸ் அதிகாரியாக இருக்கும் விக்ரம் கல்லூரி மாணவியான த்ரிஷாவிடம் கேட்பார்.
”காலேஜ் படிக்கும் பொண்ணு கையில் 20 ரூபாய் வைச்சிருக்க மாட்டியா”
அதற்கு த்ரிஷா சொல்வார் “அவ்வளவு காசு எனக்கெதுக்கு. போக வர பஸ்பாஸ். ஒருவேளை அது தொலைஞ்சா போக 2.50 வர 2.50 அஞ்சு ரூபாய் இருக்கு. சாப்பிட தயிர்சாதம். தொட்டுக்க மாவடு. எனக்கு எதுக்கு அவ்வளவு காசு”
என்பார். இந்த வசனம் குடும்பஸ்தர்களாக ஆண்களையும் பெண்களையும் கொண்ட தமிழ் சமூகத்து மக்களை அளவுக்கு அதிகமாய் மகிழ்ச்சிப்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை.
காரணம் அதில் தெரியும் பெண்ணடிமைத்தனம். ஒரு பெண் பணம் காசே செலவழிக்க கூடாது. அவளுக்கு கல்லூரி போகும் உரிமையை கொடுத்தது ஆண். அதை மட்டும் செய்ய வேண்டுமே தவிர அவள் கையில் கொஞ்சம் பணம் வைத்து அவளுக்கு பிடித்த மாதிரி செலவு செய்து விட கூடாது. காரணம் வீட்டு பணம் என்பது எப்போதும் ஆண்கள் கையிலேயே அவர்கள் கட்டுபபாட்டிலேயே இருக்க வேண்டும்.
சாமி விக்ரம் கேரக்டராக ஒரு சமூக அறிவுள்ள போலீஸ் அதிகாரியாக இருந்தால் த்ரிஷா வீட்டுக்கு சென்று அவரது கார்டியன் / பெற்றோர்களிடம்
“ உங்க பொண்ண இப்படியா வளப்பீங்க. எப்பவுக் கையில ஒரு ஐநூறு ரூபாய் கொடுத்து வைச்சி அவங்க இஷ்டப் போல செலவு செய்துக்கலாம்னு சொல்லி வையுங்க. இப்படி காலேஜ் விட்டா வீடு. வீடு விட்டா காலேஜுனு இருந்தா அவளுக்கு உலகம் எப்படி தெரியும். நீங்க இப்படி செய்யும் போது காசுக்கும் பணத்துக்கும் தனக்கும் சம்பந்தமே இல்லை. அதை தேவைப்படும் கேட்டாக்க அப்பா கொடுப்பாரு, அண்ணன் கொடுப்பான், ஹஸ்பண்ட் கொடுப்பாரு அப்படிங்கிற மனநிலைதான் வளரும். “ என்று சொல்லி இருப்பார்.
உளவியல்ரீதியாக குடும்பத்து இளம்பெண்கள் இன்னமும் முழுமையாக ஆண்களில் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறார்கள் என்பது விஸ்மயாவின் மரணம் தெளிவாக காட்டுகிறது.
இந்த உளவியல் பிடியில் இருந்து பெண்கள் எப்படி விடுபடுவது என்பதான வாதங்கள், விவாதங்கள் மற்றும் சிந்தனைகளைதான் இப்போது அதிகம் விவாதிக்க வேண்டும்.
ஒரு பானையை களிமண்ணில் இருந்து தனக்கு பிடித்த வடிவமாக ஒரு பானை செய்பவர் செய்து எடுத்துக் கொள்வதுபோல இங்கே ஆணாதிக்க சமூகமும் பெற்றோரும் விஸ்மயா போன்ற ஏராளமான இளம்பெண்களின் மனதை தங்களுக்கு பிடித்தமாதிரி பெண்ணடிமைத்தனமான வடிவமாக செய்து வைக்கிறார்கள்.
அப்படியாக வளர்க்கப்படும் அப்பாவி பெண்கள் அதீதமாக ஏதாவது நடக்கும் போது என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து போகின்றனர். திகைப்பு முடியுமுன்னே கொலைகாரர்களால் தங்கள் உயிரை இழக்கின்றனர்.
விஸ்மயாவின் கலங்கும் போட்டோ அதைத்தான் காட்டுகிறது.

No comments:
Post a Comment