அட்வெந்து ( Advent ) திருவருகை
திருவருகை என்பது ஆண்டவர் இயேசுவின் திருவருகையை எதிர்நோக்கிக் காத்திருக்கும் காலம்.
திருமறையில் புதிய ஏற்பாட்டில் உள்ள இயேசுவின் இரண்டாம் வருகையைக் குறிக்கும் புரூசியா ( Parousia) என்ற கிரேக்கச் சொல்லை லத்தீன் மொழியில் Adventus என்று மொழிபெயர்த்தனர். அதை ஆங்கிலத்தில் Advent என்று மொழியாக்கம் செய்தனர்.அதற்குத் திருவருகை ( coming ) என்று பொருள். திருச்சபைகளின் " வழிபாட்டு ஆண்டு " ( Liturgical year) ஒழுங்கு முறைமை திருவருகையின் முதல் ஞாயிற்றுக் கிழமையிலிருந்து தொடங்குகிறது.
வரலாறு:
மார்டின் என்கிற ஒரு ஹங்கேரிய இளைஞர் இயேசுவை ஏற்றுக் கிறிஸ்தவரானார். அவர் ரோம இராணுவத்தில் சேர்ந்து பணிபுரிந்தார். ஒருசமயம் இயேசுவின் தரிசனம் கண்டு தன் பணியை விட்டு விலகித் திருப்பணியாற்றினார். சிறுவர்கள், ஏழைகள் மீது அதிக கரிசனை கொண்டிருந்தார். மக்கள் அவரைப் பேராயர் ஆக்கினார்கள். அவரது மரணத்திற்குப் பின் போப் அவரைத் " தூயவர் " ஆக்கினார். திருச்சபை மக்கள் அவரது பிறந்த நாளிலிருந்து - நவம்பர் 11- நாற்பது நாட்கள் நோன்பிருந்து மனந்திரும்புதலைச் செயல்படுத்தினர். இப்பழக்கம் நான்காம் நூற்றாண்டிலிருந்து மத்தியக் காலம் வரை கொண்டாடப்பட்டது. அந்நாட்கள் " தூய மார்டின் நோன்பு " என்று அழைக்கப்பட்டது. பிற்காலத்தில் அந்த நோன்பு நாட்கள் குறைக்கப்பட்டு " திருவருகைக் காலம் " ( Advent season) என்று அழைக்கப்பட்டது. நான்காம் நூற்றாண்டிலிருந்துதான் கிறிஸ்து பிறப்புப் பண்டிகை கொண்டாடும் பழக்கம் தோன்றியது. அதன்படி மாற்றி அமைக்கப்பட்ட திருவருகைக் காலத்தின் முதல் ஞாயிறு, கிறிஸ்து பிறப்பு திருநாளுக்கு முன்வரும் நான்காவது ஞாயிறு ஆகும். இது நவம்பர் 27 முதல் டிசம்பர் 3 க்குள் அமையும்.இக்காலம் முழுவதும் ஜெபம், தவருகளுக்காக வருந்துதல், நோன்பு ஆகியவை செயல்படுத்தப்படும்.
கிழக்கத்திய வைதீகத் திருச்சபையினர் இதைக் " கிறிஸ்து பிறப்பு நோன்பு " ( Nativity Fasting ) என்று கொண்டாடுகின்றனர். ( ஆனால் அத்திருச்சபையினர் இதைத் திருச்சபை ஆண்டின் தொடக்கமாக கொண்டாடவில்லை. அவர்களுடைய திருச்சபை ஆண்டு செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
பின்னர் அதிலும் மாற்றம்பெற்று ஒரு சில திருச்சபையினர் " மகிமை விளங்கிய திருநாள் " ( Epiphany Day) - ஜனவரி 6 ஆம் தேதிக்கு முந்தின மூன்று வாரங்கள் " திருவருகை நோன்பு நாட்களாக " ( Advent Fasting) கடைப்பிடித்தனர். தூய வெள்ளிக்கிழமைக்கு முன் நாற்பது நாட்கள் " லெந்து கால நோன்பாக " ( Lenten Fasting ) கடைப்பிடிப்பதுபோல், கிறிஸ்து பிறப்பு பண்டிகைக்கு முன் " திருவருகை நோன்பு " கொண்டாடப்படுகிறது.
மேற்கத்தியத் திருச்சபைகள் இக்காலத்தைக் கிறிஸ்து பிறப்பு கொண்டாட்டத்திற்கு எதிர்பார்புடன், காத்திருத்தல், ஆயத்தமாகுதல் என்ற எண்ணங்களுடன் கொண்டாடுகின்றனர்.
நம்முடைய சபைகளில் இக்காலத்தை எவ்வாறு கொண்டாடுகிறோம்?
திருவருகை என்ற சொல், யூதர்கள் எதிர்பார்த்த மேசியாவாகிய இயேசுவின் " மனுவுறுவேற்பாகிய முதல் வருகையையும்" ; கிறிஸ்தவர்களாகிய நாம் அனைவரும் எதிர்பார்க்கும் "இரண்டாம் வருகையையும்" குறிக்கும். ( The Advent season offers the opportunity to share in ancient longing for the coming of Messiah and to the alert for His Second Coming).
இங்கு ஒரு கருத்தை மனதில் கொள்ளுங்கள்; " பரூசியா " என்ற கிரேக்கச் சொல்லிற்கு " வருகை " ( coming) என்றுதான் பொருள். முதல் வருகை, இரண்டாம் வருகை என்று இயேசு தமது " வருகையை " எண்ணிக்கையிட்டுக் கூறவில்லை. மற்ற நற்சேய்தியாளர்களும் அவ்வாறு கூறவேயில்லை. ஆண்டவர் எப்போதும் வருகிறார். ( பின்னர் விளக்குகிறேன் ).
பாரம்பரியங்கள்
இக்காலத்தில் வாசிக்கப்படும் திருமறைப் பகுதிகள், அருளுரைகள் யாவும் இயேசுவின் இரண்டாம் வருகையைப்பற்றியதாகவே இருந்தாலும், அவர் மனுவுறுவேற்று வந்த முதல் வருகையும் நினைவுகூறப்படும். இவைகள் மனந்திரும்புதலுக்கான துக்கம், விழிப்புணர்வுடன் காத்திருத்தல் ஆகியவை நிறைந்த கருத்துக்களுடன், இயேசுவை முதலாம் வருகையின் மீட்பராகவும், இரண்டாம் வருகையின் நியாயாதிபதியாகவும் நிறுத்துகின்றன.
வழிபாட்டு வண்ணங்கள்
லுத்தரன், மெதடிஸ்ட், ஆங்கிலிக்கன் ஆகிய மேற்கத்தியத் திருச்சபைகள் கருநீலம் ( Violet / Purple ) அல்லது நீலம் ( Blue) ஆகிய வண்ணங்களை இக்காலத்திற்கான வண்ணங்களாக ஏற்றுள்ளன. நமது தென் இந்தியத் திருச்சபையும் கருநீல வண்ணத்தை ஏற்றுள்ளது. தொங்குதிரை, திருப்பீடம், ஆயரின் ஸ்டோல் அனைத்தும் இவ்வண்ணங்களில்தான் இருக்க வேண்டும். கத்தாலிக்கர் கருநீலம் வண்ணத்தை ஏற்றுள்ளனர்.
பாடல்கள்
ஹேன்டல் ( Handel) என்பவர் எழுதிய மேசியா என்ற பாடல் சிறப்பாகப் பாடப்படும். திருவருகையின் கடைசி வாரத்தில் ( டிசம்பர் 17-24 ) ஓ என்று தொடங்கும் ஏழு முறை முறையாகப் பாடும் பாடல்கள் ( O Antiphons ) பாடப்படும். ( O Wisdom, O Root of Jesse, O Key of David, O Day Spring, O King of the Nations, O with us is the God ) நான் இறையியல் கல்லூரியில் பணிபுரிந்தபோது " ஈசாய் என்னும் அடிமரம் துளிர்விடும், லேசாப் புன்னகை பூத்திடும் " என்று ஒரு பாடல் இறைவருகை இன்னிசை வழிபாட்டிற்காக அமைத்துக் கொடுத்தேன். மேலும் " இம்மானுவேலே வாரும்" ( பாமாலை 46-54) , " வரவேணும் எனதரசே" ( கீர்த்தனை 63-69) போன்ற பாடல்கள் இந்நாட்களில் பாடவேண்டும்.
(Source: Unknown )
No comments:
Post a Comment