Wednesday, November 18, 2020

Soorarai Potru - A different perspective

 - சூரரைப்  போற்று


"இன்று என் மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் ,  இடர் பல வரினும் அவன் துணிந்து நின்று எதிர்கொள்வான்"


அப்பா அடித்ததற்காக - நான் செத்தாலும் என் பொணத்தை தூக்க இவன் வரக்கூடாது என்று  கோபத்தில் சொன்ன ஒரு வார்த்தைக்காக, அப்பாவிடம் பேச மறுத்த மகன்களுக்கெல்லாம் இந்த படம் ஒரு பாடம்.


அப்பாவின் மரணத்திற்கு வர முடியாத ஒரு சூர்யா வைப் பற்றிய கதை சூரரைப் போற்று. ஆனால் நிறைய சூர்யாக்களை வெளிநாட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் தெரிந்திருப்பார்கள். உங்கள் அருகிலேயே அந்த சூர்யா இருக்கலாம்.  என்னைச் சுற்றியும் கூட அவர்கள் இருக்கிறார்கள்.


அப்பா இறந்த பிறகுதான் அப்பா தன் மீது வைத்த  அந்த அன்பு பல மகன்களுக்கும் தெரிய  வரும். விமான டிக்கெட் வாங்க காசு இல்லாமல், காரில் - லாரியில் பயணித்து , மாறன் சோழவந்தான் வந்தடையும்போது , அவன் வந்திடுவானா இல்லை தான் பேசிய வார்த்தைக்காக வரவேமாட்டானோ ? என்று வாசல்பார்த்தே ஏங்கி இறந்த, அவன் அப்பாவின் சடலத்தை எவருமே இல்லாமல் அடக்கம் செய்திருப்பார்கள்.


" ஏண்டா வந்த ஏண்டா வந்தே " என்று அவனது அம்மா அடிக்கும்போது "காசில்லமா...டிக்கெட் வாங்க காசில்லமா" என்று மாறன் புலம்பும் காட்சி, நிச்சயமாய் அப்பாவின் மரணத்திற்கு வரமுடியாதவர்களுக்கு அதிகமான கண்ணீரை வரவழைத்திருக்கும்.


அந்தக் காட்சியில் ஊர்வசியும் சூர்யாவும் அப்படி நடித்திருப்பார்கள். படம் ஏன் பார்க்கவேண்டும் என்பவர்களுக்கு அந்த ஒரு காட்சிக்காகவாவது பார்க்கலாம்.


"உங்க அப்பா உம்மேல எவ்வளவு பாசம் வச்சிருந்தார் தெரியுமாடா ?


அவர் எழுதி வச்சத படிச்சி பாருடா" என்று அப்பாவின் டைரி பக்கத்தை வீசியெறிகிறாள் அம்மா.


அதில் எழுதியிருக்கிறது;.


"இன்று என் மகன் வீட்டை விட்டு வெளியேறிவிட்டான் இனி இடர் பல வரினும் அவன் துணிந்து நின்று எதிர்கொள்வான்"


"அவன் பறக்கப்போகிறான் என்று பேச்சு சொல்கிறாள்  அதைப்போல் அவன் பிறரையும் பறக்க வைக்காமல் அயரமாட்டான்"


"ஊர்குருவி பருந்தாகாது என்று ஊர் சொல்லும் ஆனால்  என் மகன் அதனை மாற்றி அமைப்பான் "


ஒவ்வொரு அப்பாவுக்கும் மகன்களின் மீது , இந்த அசராத நம்பிக்கை இருக்கும். ஆனால் மகன்கள் புரிந்து கொள்வதற்கு அப்பா இறக்க வேண்டியதிருக்கிறது.    📷


அப்பாவிடம் அம்மாவிடம் சின்ன தவறுக்காக பேச மறுத்தவர்களெல்லாம் இப்போதாவது பேசி விடுங்கள். காலம் அதிகமில்லை உங்களுக்கும் அவர்களுக்கும்.  📷


====


இது ஒரு சுய முன்னேற்ற கதையாக எடுத்துக் கொள்ளலாம், ஆனால் அவனுக்கு நடந்தது அப்படியே நமக்கும் நடக்கும் என்று நினைத்துவிட முடியாது.


அவனுடைய முயற்சி , திறமை , குறிக்கோளின் மீதுள்ள நம்பிக்கை மற்றும் பொம்மி , எல்லாம் சேர்ந்துதான் அவனுக்கு தன்னம்பிக்கை.


வெறும் தன்னம்பிக்கையை மட்டும் வைத்திருந்தால் அவன்  விமானத்தை வேடிக்கைதான் பார்த்திருக்க முடியும்.


அவன் தளர்ந்து நிற்கும்போதல்லாம் அவனுக்கு இசைந்து கொடுத்து வாழ்வை நகர்த்தியவள் பொம்மி.


இந்த சீன நீங்க கவனிச்சீங்களான்னு தெரியல..


மனைவியுடன் பைக்கில் வெளியே சென்றிருக்கும் போது, ஒருநாள் அவனுக்கு போன் கால் வருகிறது.


வாங்கிய விமானத்தை அரசியல் செய்து ஏமாற்றியதாக நண்பன் சொன்னதைக் கேட்டு, மனைவியை அப்படியே விட்டுவிட்டு கிளம்பும்போது , அவள் தூரத்தில்  "நான் ஆட்டோல போய்க்கறேன் நீங்க போங்க" என்ற காட்சியிலும் ,


விமானம் விபத்துக்குண்டான நிலையில் அதற்குண்டான விளக்கம் கொடுக்கும் காட்சியில், பொம்மி தனக்கு வந்த பிரசவ வலியை பொறுத்துக்கொண்டு , "நீங்க பாருங்க நான் பார்த்துக்கறேன் "என்று சைகை காட்டும் காட்சியும் மாறனுக்கு பொம்மி எவ்வளவு ஆதரவாய் இருந்திருக்கிறாள் என்பதைக் காட்டுகிறது.


அதுவெல்லாம் சின்ன சின்ன காட்சிகள்தான் ஆனால் அவ்வளவு அர்த்தம்.


நீங்க நினைச்சுப் பாருங்களேன் , வெளியே அழைத்துச் சென்ற மனைவியை அப்படியே விட்டுட்டு வந்தா எவ்வளவு சண்டை வீட்டுல இருக்கும்..


"எப்படி என்னய விட்டுட்டு வரலாம்..?"


"உங்களுக்கு பிஸினஸ்தான் முக்கியமா பேச்சா... "


"நண்பர்கள்தான் முக்கியமா" என்றெல்லாம் டார்ச்சர் இருந்திருந்தால் அவன் வாழக்கையை பொம்மியிடமிருந்து மீட்பதே ஒரு சுய முன்னேற்றக் கதையாக மாறியிருக்கும்...  📷.


மாறனின் வெற்றிக்கு அடிப்படை காரணம் , அவனது அம்மா தனது நகையை பொம்மிக்கு பன் கடைக்காக கொடுத்த அந்த புள்ளிதான்.


மாறன் எல்லாம் இழந்து நிற்கும்போது அவனுக்கு ஊன்றுகோலாக இருந்தது பொம்மிதான்.


பொம்மி இல்லையென்றால் அவன் டம்மி விமானம்தான் வாங்கியிருப்பான்.


=====


"டாட்டா 20 வருசம் காத்திருந்தும் முடியல நீ என்ன சாதிக்க முடியும் ?" என்று  கார்ப்பரேட் கைக்கூலிகள் அவனுக்கு முட்டுக்கட்டை போடும்பொதெல்லாம்,  அதனை அலட்சியப்படுத்தியதே அவனின் வெற்றிக்கு காரணம்.


ஒரு தொழில் ஆரம்பிக்க நினைக்கும் போது நமக்கு வருகின்ற முட்டுக்கட்டைகள்தான் இது போன்ற வார்த்தைகள். "அவனாலேயே முடியல உன்னால முடியுமா" என்று  எதிர்மறை எண்ணங்களை விதைப்பார்கள். பணமுள்ள ஒருத்தனால முடியாதது உங்களாலயும் முடியாதுன்னு நம்புறதே ஒரு முட்டுக்கட்டைதான்.


"வெள்ளையா இருக்ககுறவன் பொய் சொல்லமாட்டான்கிற " சொல்லாடல் போலத்தான் இதுவும்.


"இவ்வளவு வருசம் பிஸினஸ் பண்ற எங்களுக்கு தோணாததா உனக்கு தோணுது.. " என்று  வியாபாரத்தில் கொழித்த பரேஷ் சொல்லும் காட்சியை , தொழில் ஆரம்பித்து முன்னேறத் துடிக்கும் நீங்களும் கேட்டிருக்கலாம்.


அவ்வளவு வருசம் பிஸினஸ்ல இருக்கவறனுக்கு இல்லாத ஐடியாவா உங்களுக்கு வந்திடப்போகுது என்பதுமே ஒரு முட்டுக்கட்டைதான்.


அப்படி ஒவ்வொருவரும் நினைத்திருந்தால் ஓலா , உபர் , ஸ்விக்கி  அமேஷான் போன்ற புதிய ஐடியாக்களுடன் உள்ள நிறுவனங்கள் எல்லாம் தொழிலில் கொடி கட்டிப்பறந்தவர்களின் மூளைக்கு எட்டாததுதான்.


உயரத்தில் இருக்கும்போது தரையெல்லாம் சமமாக தெரியும் அவர்களுக்கு . தரையில் இருப்பவர்களுக்குத்தான் மேடு-பள்ளங்கள் , அதைக் கடக்கும் பயணங்களின் சிரமங்கள் அறிவார்கள்.


அது மட்டுமல்ல ஒரு வலிக்கு எல்லாவற்றையும் மாற்றும் சக்தி இருக்கிறது.


மாறனை மாற்றியது அப்பா இறந்த வலிதான்.


==========


அப்பா சொல்லுவாருடா " காலம்தான் முக்கியம் , நேரம்தான் முக்கியம். சமயத்திற்கு போய் சேர முடியலைன்னா எதுக்குடா அந்த பணம்?  "


காலத்தை இழந்து பணம் ஈட்டியவர்கள் எல்லாரும்  பணத்தை இழந்து காலத்தை மீட்க முடியாமல் இப்போதும் தவித்துக் கொண்டிருக்கின்றார்கள்.


வானம் என்ன உங்கப்பன் வீட்டு சொத்தான்னு டயலாக் பேசிட்டு நானும் ஃப்ளைட் வாங்குறேன்னு கிளம்பிடாதீங்க....


அவரவர்களுக்கு எது சாத்தியப்படும் சூழல் இருக்கிறதோ அதனை செய்யுங்கள்.  


இல்லையெனில் நீங்கள் கப்பல் வந்து சேராத துறைமுகத்தில் காலம் முழுவதும் காத்திருக்கவேண்டி வரும். ஏனென்றால்  எல்லாருக்கும் பொம்பியும் பன் கடையும் வாய்ப்பதில்லை.


- ரசிகவ் ஞானியார்


[#SuraraiPotru](https://www.facebook.com/hashtag/suraraipotru?__eep__=6&__cft__[0]=AZXV3PbjRLNM2L1LeSUbZEQZnhhMXlsH9uekXcJ4MsiAbjdeL3Yo37suERz4YMQF1aNjy0UUiKaVLb8GeuE-Ffpj_8aYdswHrTGC3zIe7vIPBg&__tn__=*NK-R) [#movie](https://www.facebook.com/hashtag/movie?__eep__=6&__cft__[0]=AZXV3PbjRLNM2L1LeSUbZEQZnhhMXlsH9uekXcJ4MsiAbjdeL3Yo37suERz4YMQF1aNjy0UUiKaVLb8GeuE-Ffpj_8aYdswHrTGC3zIe7vIPBg&__tn__=*NK-R) [#revie](https://www.facebook.com/hashtag/review?__eep__=6&__cft__[0]=AZXV3PbjRLNM2L1LeSUbZEQZnhhMXlsH9uekXcJ4MsiAbjdeL3Yo37suERz4YMQF1aNjy0UUiKaVLb8GeuE-Ffpj_8aYdswHrTGC3zIe7vIPBg&__tn__=*NK-R)

No comments:

Post a Comment

Current Post

எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்!

 எதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது ஒரு கலை! அதை கற்க 5 சுலபமான வழிகள்! உங்க அமைதியை குலைக்காத/கெடுக்காத எண்ணங்களை மட்டும் தேர்ந்தெடுங்கள்...! ...